×

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக கனமழை

நாசரேத், மார்ச் 21: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பரவலாக பலத்த மழை பெய்தது. நாகலாபுரத்தில் சூறைக்காற்றில் மரம் சாய்ந்தது. தமிழ்நாடு முழுவதும் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மதியம் பரவலாக மழை பெய்தது. தூத்துக்குடி மாநகர பகுதியில் சாரல் துவங்கி மழை கொட்டியது. ஒரு சில இடங்களில் அரை மணி நேரம் கனமழை பெய்தது. நாசரேத், பிரகாசபுரம், மூக்குப்பீறி, ஞானராஜ்நகர், மணிநகர், வெள்ளரிக்காயூரணி, வகுத்தான்குப்பம், வாழையடி, அகப்பைகுளம், மாதாவனம்,கந்தசாமிபுரம், வெள்ளமடம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் தண்ணீர் வெள்ளம்போல் ஓடியது. பொதுமக்கள் சாலையில் குடை பிடித்தபடி சென்றனர். மேலும் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. நாகலாபுரம், கவுண்டன்பட்டி, சங்கரலிங்கபுரம், ரெட்டியபட்டி, மகாராஜபுரம்,  குருவார்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் 2 மணி முதல் 2.30 மணி வரை பலத்த காற்றுடன் மழை  பெய்தது. சூறைக்காற்றில் நாகலாபுரம்-  காடல்குடி சாலையிலுள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் உள்ள வாகைமரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. சம்பந்தப்பட்ட துறையினர்  மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதேபோல் புதூர், விளாத்திகுளம் மற்றும்  சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த திடீர் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : Tuticorin district ,
× RELATED சத்துணவு மையங்களில் கலவை சாதம்...