×

ஓமலூரை மையமாக கொண்டு சென்ட் தொழிற்சாலை

சேலம் மாவட்டம், மா சாகுபடிக்கு பெயர் போனது. அதற்கு அடுத்தபடியாக பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது மா சாகுபடியை பின்னுக்கு தள்ளி, பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம், பனமரத்துப்பட்டி, மேட்டூர், மேச்சேரி, வீரபாண்டி உட்பட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில், பல வகை பூக்களும் சாகுபடி செய்யப்படுகிறது. ஓமலூர், தாரமங்கலம், காடையாம்பட்டி ஆகிய வட்டார கிராமங்களில் குண்டுமல்லி, சன்ன மல்லி, சாமந்தி, சம்மங்கி, மரிக்கொழுந்து, ரோஸ், விரிச்சி, கோழிக்கொண்டை, அரளி உள்ளிட்ட பல வகையான பூக்கள், சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யபடுகிறது. இந்த பூக்களுக்கு நிலையான விலை கிடைப்பது இல்லை. கடந்த சில ஆண்டுகளாக பூக்களுக்கு உரிய விலையே கிடைக்காமல், சாலை ஓரங்களில், குப்பைகளில் கொட்டப்பட்டு வீணடிக்கப்பட்டது.

பூக்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலையில், விவசாயிகள் உழைப்பு மட்டுமின்றி, பல லட்சம் லிட்டர் தண்ணீர், விதைகள், பராமரிப்பு, மண்வளம், மருந்து செலவுகள் உட்பட அனைத்தும் குப்பையில் வீணடிக்கப்படுகிறது. அதனால், ஓமலூர், காடையாம்பட்டி ஆகிய வட்டாரத்தை மையமாக கொண்டு சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும். பூக்கள் ஏற்றுமதி மையம் மற்றும் பூக்கள் பாதுகாக்கும் மையம் அமைக்க வேண்டும் என, நீண்டகாலமாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக, சேலம் மாவட்ட பூ விவசாயிகள் பயனடையும் வகையில், நாளை துவங்கும் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில், நிச்சயமாக பூ தொழிற்சாலை அமைக்க, தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  பூ தொழிற்சாலை அமையும்போது, பூக்கள் ஒருபோதும் வீணாகாது. விவசாயிகளுக்கு உரிய பலன் கிடைக்கும். பூக்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் எண்ணிகையும், பரப்பும் அதிகரிக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். ஒவ்வொரு தேர்தலின் போதும், ஓமலூரில் பூ தொழிற்சாலை அமைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கப்படும் நிலையில், திமுக அரசு இதை நிறைவேற்றும் என்று நம்புவதாக விவசாயிகள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

Tags : Cent Factory ,Omalore ,
× RELATED ஓமலூர் பகுதியில் திடீர் ஆய்வு ரேஷன்...