×

கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வேண்டுகோள்

உடுமலை, மார்ச் 19: உடுமலை  நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்த  ஆய்வுக்கூட்டம் நேற்று நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர்  வினீத் முன்னிலை வகித்தார். செய்தித்துறை அமைச்சர்  மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவர் மத்தீன் வரவேற்றார். ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: உடுமலை  நகராட்சியில் பல்வேறு பணிகள் குறித்தும் குறிப்பாக கோடைகாலம் தொடங்குவதால்  குடிநீர் பொதுமக்களுக்கு தேவையான அளவு வழங்கப்பட வேண்டும் எனவும் ஆய்வு  கூட்டம் நடைபெற்று வருகிறது. உடுமலை நகராட்சியில் குடிநீர் பொதுமக்களுக்கு  தேவையான அளவு வழங்கப்பட்டுள்ளது. ஒருசில பகுதிகளில் மேல்நிலைத்தொட்டி  அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதை நகராட்சி நிர்வாகம் மூலம்  அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.திருமூர்த்தி அணையிலிருந்து  கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு  வருகிறது. எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் இந்த  ஆய்வுக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. 2021-22ம் நிதியாண்டில்  செய்யப்பட வேண்டிய பணிகளை செய்து முடித்தும், 2022-23ம் நிதியாண்டில்  அறிவிக்கப்பட்ட திட்டங்களையும் விரைந்து செய்து முடித்தால் தான் அடுத்த  பணிகளை செய்து முடிக்க வாய்ப்புகளாக அமையும்.உடுமலை நகராட்சியின் சார்பாக  வடிகால் அமைக்கும் பணிகளை கால தாமதம் ஏற்படாமல் விரைந்து  முடிக்கவும், மின்சார வாரியத்தின் சார்பில் பழுதடைத்த மின்கம்பிகளை  மாற்றியமைக்கவும், நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் பழுதடைந்த சாலைகளை  எல்லாம் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் கோடை இருப்பதால்  ஏற்கனவே வழங்கப்படுகின்ற குடிநீரினை எந்த வித தடைகளும் இன்றி  பொதுமக்களுக்கு வழங்கவேண்டும். மானிய கோரிக்கையில் நிதிநிலையறிக்கை  சமர்பித்தவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்து  நடைபெற்று வரும் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள  இருக்கிறார்கள்.
அதற்குள் மாவட்டத்தில் முடிக்க வேண்டிய பணிகளை  விரைந்து முடிக்க அனைத்து துறை அலுவலர்களையும். உள்ளாட்சி அமைப்பு  பிரதிநிதிகளையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர்  பேசினார்.

நிகழ்ச்சியில், திருப்பூர்  மாநகராட்சி 4ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன்,  முன்னாள் எம்எல்ஏ ஜெயராமகிருஷ்ணன், நகர  செயலாளருமான கவுன்சிலருமான வேலுச்சாமி, துணைத்தலைவர் கலைராஜன், கவுன்சிலரும் இளைஞரணி அமைப்பாளருமான  ஜெயக்குமார், உடுமலை நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன்,  அனைத்துத்துறை  அலுவலர்கள் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,M. P. Saminathan ,
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...