×

பெண் போலீசாருக்கு மதுரையில் தங்கும் விடுதி தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு

மதுரை, மார்ச் 19: பெண் போலீசாருக்கு மதுரையில் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும் என அறிவித்த தமிழ்நாடு முதல்வருக்கு பெண் போலீசார் நன்றி தெரிவித்துள்ளனர்.மகளிர் காவலர்கள் பொன் விழா ஆண்டை முன்னிட்டு, நேற்று முன்தினம் சென்னையில் பதக்கம் மற்றும் கோப்பைகள் வழங்கும் விழா நடந்தது. இதில் பெண் காவலர்களுக்கு 9 புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். இதில் பெண் காவலர்கள் குடும்ப தலைவிகளாக இருந்து கொண்டு காவல் பணி செய்து வருவதால், ரோல்கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணி என்று மாற்றி அமைக்கப்படும். மதுரை, சென்னை ஆகிய பெருநகரங்களில் பெண் காவலர்கள் தங்கும் வகையில் விடுதிகள் அமைக்கப்படும்.

பெண் காவலர்களுக்கு பணி இடத்தில் தனியாக ஓய்வறையுடன் கழிவறையும் அமைக்கப்படும் என 9 புதிய அறிவிப்புகள் அறிவித்துள்ள தமிழக முதல்வருக்கு மதுரை பெண் போலீசார் நன்றியை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெண் போலீசார் கூறும்போது, ‘தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பு ஏற்ற நாள் முதல் போலீசாருக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
தென்மாவட்டமான நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வழக்கு தொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளைக்கு வரவேண்டிய நிலை உள்ளது. அதிகாலையில் புறப்பட்டு வரும் எங்களுக்கு மதுரையில் தங்கி உடை மாற்ற கூட ஒரு இடம் இல்லை.

அதேபோல் இரவு நேரத்தில் தங்கிச்செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. முதல்வர் அறிவித்தது போல் மகளிர் போலீசாருக்கு விடுதியை ஏற்படுத்தினால் இதுபோன்ற பணிகளுக்கு வந்து செல்லும் போது, தங்கி ஓய்வு எடுத்துச்செல்ல வசதியாக இருக்கும். மேலும் எங்கள் குழந்தைகளை பராமரிக்க காவலர்கள் குழந்தைகள் பாதுகாப்பு மையம் துவங்கப்படும் என அறிவித்துள்ளார். இது வந்தால் குழந்தைகளை பராமரிக்க மிகப்பெரிய வசதியாக இருக்கும். எங்களுக்கென அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி பல திட்டங்களை அறிவித்த தமிழ்நாடு முதல்வருக்கும், தமிழ்நாடு டி.ஜி.பிக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்’ என்றனர்.

Tags : Madurai ,Tamil Nadu ,Chief Minister ,
× RELATED கொரோனா தாக்குதலால் கணவரை இழந்தவர்...