×

கிட்டங்கியில் நெல் மூட்டைகளை இருப்பு வைத்துள்ள விவசாயிகளுக்கு பொருளீட்டு கடனுதவி குறைதீர் கூட்டத்தில் வழங்கப்பட்டது

ராமநாதபுரம், மார்ச் 18: ராமநாதபுரத்திதல் நடந்த குறைதீர் கூட்டத்தில் கிட்டங்கிகளில் நெல் மூட்டைகளை இருப்பு வைத்துள்ள விவசாயிகளுக்கு வேளாண்மை விற்பனை, வேளாண் வணிகத்துறை மற்றும் விற்பனைக்குழு சார்பில் பொருளீட்டு கடனுதவிகள் வழங்கப்பட்டன. ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் வேளாண் விற்பனை, வேளாண் வணிகத்துறை ராமநாதபுரம் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. இங்கு  விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கமிஷன் இடைத்தரகர் இன்றி விற்று பயன்பெறலாம். விளைபொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும் போது விலை வீழ்ச்சியடைகிறது. அத்தகைய காலங்களில் அந்தந்த பகுதி விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ள கிட்டங்களில் இருப்பு வைத்துக் கொள்ளலாம்.

கிட்டங்கிகளில் இருப்பு வைக்கப்படும் விளைபொருட்களுக்கு விவசாயிகளுக்கு மெ.டன்னிற்கு தினமும் 1 ரூபாய் என  குறைந்த வாடகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விளைபொருட்களை இருப்பு வைப்பதன் மூலம் பொருளீட்டு கடன் பெறும் வசதி உள்ளது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இருப்பு வைத்து மொத்த மதிப்பில் 50 முதல் 75 சதவீதம் வரை, 5 சதவீத வட்டி விகிதத்தில் 6 மாதம் வரை அதிகபட்சமாக  ரூ.3 லட்சம் வரை பொருளீட்டு கடன் பெற்று, விளைபொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளலாம். இருப்பு வைக்கப்படும்
விளைபொருட்களுக்கு காப்பீடு வசதி உள்ளது.

இதன் அடிப்படையில் நேற்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ராமநாதபுரம் விற்பனைக்குழு கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் திருவாடானை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் உள்ள 2 ஆயிரம் மெ.டன் கிட்டங்கியில் நெல் மூடைகளை இருப்பு வைத்த விவசாயிகள் ஜோஸ்பின் அமலாவுக்கு ரூ.1.50 லட்சம், சக்திவேலுக்கு ரூ.ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 640 பொருளீட்டு கடன் தொகைக்கான காசோலையை மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் மீட்பு) ராஜசேகர் வழங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி, வேளாண் இணை இயக்குநர் சரஸ்வதி, இணை பதிவாளர் மனோகரன், ராமநாதபுரம் விற்பனைக்குழு செயலாளர் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Kitanki ,
× RELATED ரயில் நிலையம் புனரமைப்பு