×

திருவெற்றியூர்-கொட்டகுடி விலக்கு சாலையில் நிழற்குடை அமைக்க மாணவர்கள் கோரிக்கை

திருவாடானை, மார்ச் 18: திருவெற்றியூர்-கொட்டகுடி விலக்கு சாலையில் ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி அருகே நிழற்குடை அமைக்க வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானையில் இருந்து திருவெற்றியூருக்கு அரும்பூர், ஆதியூர் வழியாக சாலை அமைக்கப்பட்டு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சாலையில் திருவெற்றியூர் முன்பாக கொட்டகுடி விலக்கு பகுதியில் ஆர்.சி.மேல்நிலைப் பள்ளி அருகே 10 ஆண்டுகளுக்கு முன்பு நிழற்குடை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில் போதிய பராமரிப்பின்றி, அந்த நிழற்குடை பழுதடைந்த நிலையில் உள்ளது. கடந்த ஆண்டு பருவ மழை கொட்டிய போது,  நிழற்குடையை சுற்றிலும் தண்ணீர் தேங்கி இருந்தது. திடீரென மழை கொட்டிய ஒரு நாளில் இரவு நேரத்தில் முழுவதும் இடிந்து விழுந்து விட்டது இரவு  என்பதால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை இந்த நிழற்குடை இடிந்து ஒரு வருடத்திற்கு மேலாகி விட்டது.
இதனை அப்புறப்படுத்தி விட்டு அதே இடத்தில் புதிதாக நிழற்குடை அமைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மாணவர்கள் கூறுகையில், ‘‘மேல்நிலைப் பள்ளிக்கூடம் அருகே இந்த நிழற்குடை இருந்ததால் மாணவ, மாணவிகளுக்கு பேருதவியாக இருந்தது. மழை மற்றும் வெயில் காலங்களில் இந்த நிழற்குடை மாணவர்களுக்கு பாதுகாப்பாக இருந்தது. தவிர அருகே உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் இங்கு காத்திருந்து, வரும் பேருந்துகளில் ஏறி பயணம் செய்கின்றனர். நிழற்குடை இடிந்து விட்டதால் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வெட்ட வெளியில் பேருந்துகளுக்காக காத்திருக்கின்றனர். எனவே இங்கு புதிதாக நிழற்குடை கட்ட, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Nizhalkudai ,Thiruvettiyur-Kottagudi ,
× RELATED திருவொற்றியூரில் ரூ.60 லட்சம்...