×

வைகுண்டம் பகுதியில் மணல் கடத்தல் தடுப்பு தீவிரம்

வைகுண்டம், மார்ச் 18: வைகுண்டம் பகுதியில் மணல் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதுடன், மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ஆழ்வார்தோப்பு, ஆழ்வார்திருநகரி, பால்குளம், ஏரல் பகுதிகளில் செங்கல் சூளைகள் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில், வைகுண்டம் அருகே உள்ள பராங்குசநல்லூர் பகுதிகளில் புதிதாக செங்கல் சூளைகளுக்கு அனுமதி அளிப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு அங்கு அதிக அளவில் வளர்ந்துள்ள புளிய மரங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

மேலும் தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள செங்கல் சூளைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் தெரிவித்துள்ள புகார் மனு குறித்து கடந்த மார்ச் 14ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, வைகுண்டம் பகுதிகளில் மணல் கடத்தலை தடுப்பு பணிகளை போலீசார் தீவிரப்படுத்தினர். வைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையில் வைகுண்டம் உட்கோட்ட தனிப்படை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, பேட்மாநகரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் எந்தவித உரிய அனுமதியின்றி குளத்து மணல் எடுத்துச்சென்றது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் லாரியின் ஓட்டுநரான பொட்டலூரணி பகுதியைச் சேர்ந்த அக்னிமுத்து மகன் ஆதிமூலம் (38) என்பவரை கைது செய்து லாரியிலிருந்த 8 யூனிட் மணல் மற்றும் லாரியையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Vaikundam ,
× RELATED ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்...