×

உலக சுற்றுலா தின விழாவில் செல்போனில் நேரத்தை வீணாக்காமல் இயற்கையை ரசிக்க கற்றுக்கொள்ளுங்கள்: முதன்மை கல்வி அலுவலர் பேச்சு

காஞ்சிபுரம், செப்.29: காஞ்சிபுரத்தில் நடந்த உலக சுற்றுலா தினவிழாவில், ‘படைத்தவற்றை பார்த்து ரசிப்பதற்காகவே சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. செல்போனில் நேரத்தை வீணாக்காமல் இயற்கையை ரசிக்க கற்றுக்கொள்ளுங்கள்’  என காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எஸ்.வெற்றிச்செல்வி பேசினார். காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் சுற்றுலாத்துறை சார்பில்,  உலக சுற்றுலா தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் சு.கலைச்செல்வி தலைமை வகித்தார். கல்லூரியின் வணிகவியல் துறை தலைவர் மதி ராமலிங்கம் முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் நஜ்மா வரவேற்று பேசினார். விழாவில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எஸ்.வெற்றிச்செல்வி கலந்துகொண்டு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர், வெற்றிச்செல்வி பேசியதாவது: மனிதர்களை இயந்திர வாழ்க்கையிலிருந்து மாற்றுவது சுற்றுலாவாகத்தான் இருக்க முடியும். வெளிநாட்டிலிருந்து பல லட்சம் பேர் இந்தியாவை சுற்றிப்பார்ப்பதற்கென்றே வருகின்றனர். அடித்தளமே இல்லாமல் தஞ்சாவூர் பெரிய கோயில் எப்படி கட்டப்பட்டது என்றே தெரியவில்லை. கோயில்களில் உள்ள சிற்பங்களில் அக்கால வாழ்க்கை முறை, கலாச்சாரம், பண்பாடு இவற்றை பிரதிபலிப்பதாக உள்ளது. அதனால், தான் வெளிநாட்டினர் இந்தியா வந்து சுற்றுலாத் தலங்களை வியந்து பார்க்கின்றனர். பலரும் வந்து பார்க்க, வியக்க, ரசிக்க வேண்டும் என்பதற்காகவே பல கோயில்களில் சிற்பங்களும், சுற்றுலா தலங்களும் உருவாக்கப்பட்டிருகிறது.

புகழ் பெற்ற இடங்களில் உள்ள கோயில்கள், சிற்பங்கள் ஆகியவை எப்படி படைக்கப்பட்டிருக்கிறது என்று பார்க்க வேண்டியது அவசியம். உறவினர்களை சந்தித்து பேசவே திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. படைத்ததை பார்க்கவேண்டும் என்பதற்காகவே சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது, செல்போனில் நேரத்தை வீணாக்காமல் இயற்கையை ரசிக்க கற்றுக்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார். முடிவில், உதவி சுற்றுலா அலுவலர் கா.சரண்யா நன்றி கூறினார்.

Tags : Principal Education Officer ,World Tourism Day ,
× RELATED பள்ளி செல்லா குழந்தைகள் 18 பேர் கண்டறியப்பட்டனர் கல்வியை தொடர ஏற்பாடு