×

பெண் காவலரிடம் தாலி செயின் பறித்த வாலிபர் கைது

திண்டிவனம், ஜன. 22: திண்டிவனத்தில் பைக்கில் சென்ற பெண் காவலரிடம் தாலி செயின் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் மரக்காணம் சாலை, காமராஜர் தெருவை சேர்ந்த சரவணன் மனைவி சத்யா(34). இவர் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த செப்டம்பர் 30ம் தேதி அலுவல் சம்பந்தமாக பைக்கில் பிரம்மதேசம் காவல் நிலையம் சென்றுவிட்டு மீண்டும் திண்டிவனம் வந்து கொண்டிருந்தார். மரக்காணம் சாலை அருகே உள்ள பங்க்கில் பெட்ரோல் போட்டுக் கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். மரக்காணம் கூட்டுப்பாதை வளைவில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் காவலரின் பைக்கை வழிமறித்து கன்னத்தில் அடித்து, அவர் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயின் மற்றும் ஒன்றரை பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து சத்யா திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடிவந்தனர். இந்நிலையில் திண்டிவனம் மேம்பாலம் கீழ் பகுதியில் உதவி ஆய்வாளர் ஆனந்தராசன் மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த ஆயந்தூர் கிராமத்தை சேர்ந்த இசையாஸ் மகன் ஆமோஸ் பெர்னாண்டஸ்(23) என்பதும், பெண் காவலரிடம் தாலி செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரிடமிருந்து 5 பவுன் தாலி செயினை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED மூத்தோர் தடகள விளையாட்டு போட்டி