×

மலை காய்கறிகளின் விலை சரிவு

ஊட்டி,ஏப்.23: கேரட், பீட்ரூட் மற்றும் முட்டைகோஸ் உட்பட பல காய்கறிகளின் விலை சரிவடைந்துள்ளதால் நீலகிரி மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், வெள்ளை பூண்டு, பட்டாணி, பீன்ஸ், முட்டைகோஸ், டர்னீல், முள்ளங்கி, அவரை உட்பட பல்வேறு மலை காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோஸ் மற்றும் பீட்ரூட் அதிகளவு பயிரிடப்படுகிறது. மற்ற காய்கறிகள் குறைந்தளவே பயிரிடப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக நீலகிரியில் விளைவிக்கப்படும் மலை காய்கறிகளின் விலை குறைந்துக் கொண்டே செல்வதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.கடந்த இரு மாதங்களுக்கு முன் கேரட் கிலோ ஒன்று ரூ.30 முதல் 60 வரை ஏலம் போனது. ஆனால், தற்போது கிலோ ஒன்றிற்கு ரூ.15 முதல் 20 வரை மட்டுமே கிடைக்கிறது. அதேபோல், பீட்ரூட் கிலோ ஒன்று ரூ.12 முதல் 15 வரையில் மட்டுமே விலை போகிறது. நூல்கோல் கிலோ ஒன்று ரூ.6 முதல் 10 வரையிலும், முட்டைகோஸ் ரூ.5 முதல் 10 வரை மட்டுமே விலை போகிறது. அதேபோல், வெள்ளை பூண்டு கிலோ ஒன்று ரூ.160 வரை விலை போகிறது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விலை குறைவால் பலர் காய்கறிகளை அறுவடை செய்வதை தவிர்த்துள்ளனர். அறுவடை செய்த காய்கறிகள் மேட்டுப்பாளையம் மற்றும் சென்னை போன்ற பகுதிகளுக்கு கொண்டுச் சென்று விற்பனை செய்யும் நிலையில் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலைக்குள்ளாகியுள்ளனர்.

Tags :
× RELATED கொரோனா பரவலால் திருச்சூர் பூரம் திருவிழாவை எளிய முறையில் கொண்டாட முடிவு