×

புதுச்சேரியில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் திடீர் தயக்கம் ஒரே நாளில் 1404 ஆக சரிவு- சுகாதாரத்துறை விசாரணை

புதுச்சேரி, ஏப். 20: புதுச்சேரியில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் திடீர் தயக்கம் காட்டுவதால் நேற்று ஆயிரத்து 404 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டனர். புதுச்சேரியில் கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி ஜனவரி 16ம் தேதி முதல் சுகாதார பணியாளர்களுக்கும், பிப்.3ம் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மார்ச் 1ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கியது. இருப்பினும், கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க ஏப்.1ம் தேதி முதல் 45 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

 அரசின் தொடர்  விழிப்புணர்வு காரணமாக பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட துவங்கினர். இதையடுத்து, சுகாதாரத்துறை சார்பில் புதுவை முழுவதும் 100 இடங்களில் ஏப்.11ம் தேதி முதல் 14ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டது. அதன்படி, கடந்த 11ம் தேதி 6,871 பேரும், 12ம் தேதி 10,226 பேரும், 13ம் தேதி 14,278 பேரும், 14ம் தேதி 8,493 பேரும் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். தடுப்பூசி திருவிழாவுக்கு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததால், அதனை மேலும் 4 நாட்களுக்கு சுகாதாரத்துறை நீட்டித்தது.  இதைத் தொடர்ந்து, ஏப்.15ம் தேதி 9,082 பேரும், 16ம் தேதி 7,432 பேரும் தடுப்பூசி எடுத்துக் கொண்டனர்.  ஏப்.17ம் தேதி தடுப்பூசி போட்டுக் கொண்டோர் எண்ணிக்கை 4,978 ஆக குறைந்தது. தொடர்ந்து, தடுப்பூசி திருவிழாவின் நிறைவு நாளான 18ம் தேதி 1,404 மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.  

ஒரே நாளில் தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கை திடீர் சரிவு குறித்து சுகாதாரத்துறை ஆய்வு செய்து வருகிறது. விடுமுறை நாட்கள் என்பதால், பொதுமக்கள் தடுப்பூசி முகாமுக்கு வருவது குறைந்து போனதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை துவங்கியுள்ளது. அதே நேரத்தில் கொரோனா தடுப்பூசி மிகுந்த பாதுகாப்பானது, அனைவரும் மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென கவர்னர் தமிழிசை அழைப்பு விடுத்துள்ளார். இதற்கிடையே தடுப்பூசி போட்டுக்கொள்ள வசதியாக தினமும் ஒரு இடத்தில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. நேற்று தலைமை செயலகத்தில் நடந்த முகாமில் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் ஊசி செலுத்தப்பட்டது. தொடர்ந்து இன்று கடலூர் சாலையில் உள்ள  ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது. நாளை  உழவர் சந்தை மற்றும் தாவரவியல் பூங்காவிலும், 22ம் தேதி அந்தோணியார் கோயில் அருகில் உள்ள தனியார் மாலில் சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வதந்திகளை பரப்பாதீர்
புதுவை சுகாதாரத்துறை செயலர் அருண் கூறுகையில், கடந்த 8 நாட்களாக நடந்த தடுப்பூசி திருவிழாவில் இதுவரை 70 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இறுதி நாளில் 1404 ஆக குறைந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். தொடர்ந்து தடுப்பூசியை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அரசு அலுவலகங்கள், மக்கள் கூடும் இடங்களில் சிறப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். வரும் நாட்களில் எண்ணிக்கை உயரும். வாட்ஸ்அப்- முகநூல் பக்கங்களில் தடுப்பூசி குறித்து வீண் வதந்திகளை பரப்பக்கூடது. மிகவும் பாதுகாப்பானது. கடந்த சில நாட்களில் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 500க்கு மேல் செல்கிறது. இது மிகவும் அபாயகரமானது. கொரோனா பாதித்தால், தீவிர நிலையில் இருந்து தடுப்பூசி காக்கும் என்றார்.

Tags : Pondicherry ,
× RELATED புதுச்சேரியில் இப்போதைக்கு உள்ளாட்சி...