×

சம்பிரதாயத்திற்காக கணக்கெடுப்பு செயல்படாத மழைநீர் சேமிப்பு தொட்டி மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீர்

சிவகங்கை, ஏப்.19: சிவகங்கை மாவட்டத்தில் மழை நீர் சேமிப்பு தொட்டி குறித்த கணக்கெடுப்பு வெறும் சம்பிரதாய அளவிலேயே நடந்ததால் எவ்வித பயனும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசால் தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் மழை நீர் சேமிப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்படி அனைத்து இடங்களிலும் மழை நீர் சேமிப்பு தொட்டி அமைக்கப்பட்டது. மழைநீர் சேமிப்பு தொட்டிகள் இல்லாத வீடுகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு கடுமையாக அமல்படுத்தப்பட்ட இந்த திட்டம் பின்னர் போதிய கண்காணிப்பில்லாமல் முற்றிலும் இல்லாமல் போனது.

மழைநீர் சேமிப்புக்காக கட்டப்பட்ட தொட்டிகள் அனைத்துப்பகுதிகளிலும் தூர்ந்து போனது. இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு ஜூலையில் மீண்டும் மழை நீர் சேகரிப்பு தொட்டி குறித்த கணக்கெடுப்பு நடந்தது. இதில் ஏற்கனவே கட்டப்பட்ட மழை நீர் சேமிப்பு தொட்டிகளில் சுமார் 90 சதவீதம் தொட்டிகள் தூர்ந்து போய் இருந்த இடமே தெரியாமல் இருந்ததால் அரசு அதிர்ச்சியடைந்தது. மீண்டும் 2015ம் ஆண்டு மற்றும் அடுத்தடுத்த சில ஆண்டுகள் மழை நீர் சேமிப்பு தொட்டி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதலில் அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த வர்த்தக நிறுவனங்களில் மழை நீர் தொட்டி உடனடியாக கட்டப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் மழை நீர் வந்து தொட்டியில் சேரும் வகையிலோ, மழை நீரை உள்வாங்கும் அளவிற்கு தொட்டியில் தேவையான அளவிற்கு கற்கள் உள்ளிட்ட பொருட்களையும் போடாமல் பெயரளவிற்கு மழை நீர் தொட்டி இருப்பதுபோல் செய்தனர்.
இதனால் மழை நீர் சேமிப்பு தொட்டி என்பது பெயரளவிலேயே உள்ளது. சம்பிரதாயத்திற்காக மழை நீர் தொட்டி கணக்கெடுப்பு செய்ததால் இத்திட்டத்தின் நோக்கம் கேள்விக்குறியாகி உள்ளது. சமூக ஆர்வலர்கள் கூறுகையில், குறைந்து வரும் நீர் ஆதாரங்கள் காப்பாற்றப்படும் என்ற நோக்கத்தில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம் கண்காணிப்பு, பராமரிப்பில்லாமல் பயனின்றி போனது. அரசு அலுவலகங்களிலேயே அரசு அறிவித்தது என்பதற்காக சம்பிரதாயத்திற்காக செய்தனர். அரசு அலுவலகங்களிலேயே இந்த நிலை என்றால் வீடுகளில் திட்டத்தை செயல்படுத்துவது கடினம். அறிவிப்பிற்காக இல்லாமல் சமூக நோக்கத்தோடு செயல்படுத்தப்பட்டால் மட்டுமே இத்திட்டத்தின் நோக்கம் வெற்றியடையும். திட்டத்தை நிரந்தரமாக செயல்படுத்துவதற்கான விழிப்புணர்வு பணிகளை செய்ய வேண்டும் என்றனர். 

Tags :
× RELATED சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவூர்...