×

கண்டாச்சிபுரம் அருகே துணிகரம் ரியல் எஸ்டேட் அதிபர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்

கண்டாச்சிபுரம், ஏப்.19: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த மழவந்தாங்கல் கிராமத்தில் விற்பனைக்காக இருந்த இடத்தை பார்க்க வந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் துப்பாக்கி  முனையில் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பகுதியை சேர்ந்த ராஜேஷ் கண்ணன், சிவன், சம்பத், ராஜேந்திரன் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த வெங்கடேஷ் ஆகியோர் ரியல் எஸ்டேட் சம்பந்தமாக விழுப்புரம் தனியார் ஓட்டலில் பேசி வந்தனர். பிறகு சிவனின் நண்பர் மதுரையை சேர்ந்த நாகராஜ் என்பவருடன் கண்டாச்சிபுரம் அருகே மழவந்தாங்கல் கிராமத்தில் விற்பனைக்காக இருந்த நிலத்தை பார்க்க 2 சொகுசு காரில் சென்றனர். இவர்களை பின்தொடர்ந்து வந்த சொகுசு காரில் இருந்த மர்ம கும்பல், சிவன் மற்றும் ராஜேந்திரன் வந்த காரை மடக்கி துப்பாக்கி முனையில் இரண்டு பேரையும் கடத்தி சென்றனர்.

உடன் வந்தவர்கள் உடனடியாக கண்டாச்சிபுரம் காவல் நிலையம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை செய்து பிறகு உடன் வந்தவர்களிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். இதில் சிவன் மற்றும் ராஜேந்திரனை 3க்கும் மேற்பட்டோர் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றதாக தெரிவித்தனர். பிறகு கடத்தப்பட்ட இருவரில் ராஜேந்திரனை சேலம் அருகில் இறக்கிவிடப்பட்டதாக தெரிகிறது. சிவனை எங்கு கடத்தி சென்றனர் என போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

Tags : Kandachipuram ,
× RELATED கண்டாச்சிபுரம் அருகே பரபரப்பு...