×

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு மீண்டும் கிருமி நாசினி, முககவசம் விற்பனை அதிகரிப்பு

ஊட்டி,ஏப்16:  கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் கிருமி நாசினி மற்றும் முககவசம் விற்பனை சூடு பிடித்துள்ளது.கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவக்கம் முதல் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கியது. தமிழகத்திலும் பாதிப்பு அதிகரிக்கவே, இதனை தடுக்கும் வகையில், பொதுமக்கள் கிருமிநாசினிகளை பயன்படுத்த வேண்டும். முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அரசு பொதுமக்களை வலியுறுத்தி வந்தது. மேலும், ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி மற்றும் முககவசங்களை பொதுமக்கள் அதிகளவு வாங்க துவங்கினர். இதனால், ஒரு கட்டத்தில் மருந்தகங்களில் மற்றும் கடைகளில் கிருமி நாசினிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. பின், தொற்று படிப்படியாக குறையத் துவங்கியது. அரசும் விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த துவங்கியது. இதனால், பொதுமக்கள் வழக்கம் போல் நடமாட துவங்கினர். ஒரு சிலர் மட்டுமே கிருமி நாசினிகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். பெரும்பாலான மக்கள் கிருமி நாசினிகளை பயன்படுத்துவதை தவிர்த்து வந்தனர். மேலும், முககவசங்களை கூட பலர் அணியாமல் வலம் வந்தனர். இந்நிலையில், கொரோனா தொற்று மீண்டும் மக்களை அச்சுறுத்து துவங்கியுள்ளது. கடந்த ஒரு மாதமாக பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், மீண்டும் பொதுமக்கள் அச்சத்திற்குள்ளாகினர். அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினிகளை பயன்படுத்த துவங்கியுள்ளனர். முககவசங்களையும் அதிகம் பயன்படுத்த துவங்கியுள்ளனர். இதனால், இவ்விரு பொருட்களின் விற்பனையும் தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது.

Tags :
× RELATED தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ