×

காஞ்சிபுரத்தில் பரபரப்பு வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து:  2 பேர் கைது  ஒருவருக்கு வலை

காஞ்சிபுரம், ஏப்.16: காஞ்சிபுரத்தில் வாலிபரை கத்தியால் குத்திய 2 பேரை, போலீசார் கைது செய்தனர்.மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (19). இவரது நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த பிரவீன், பொய்யாகுளம் யுகேஷ். கடந்த 15 நாட்களுக்கு முன் 3 பேரும், மது அருந்திவிட்டு, தெரு மக்களை மிரட்டியுள்ளனர். இதனை பொதுமக்கள் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து 3 பேரும், தங்களை கண்டால், அப்பகுதி மக்கள் பயப்பட வேண்டும் என திட்டமிட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருக்காலிமேட்டை சேர்ந்த ரியாஸ் (27 ) என்ற வாலிபர், அவரது வீட்டில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற அரிகிருஷ்ணன், பிரவீன், யுகேஷ் ஆகியோர், ரியாசிடம் தகராறு செய்தனர்.

பின்னர், மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை தலை மற்றும் கழுத்துப் பகுதியில் குத்திவிட்டு தப்பி ஓடினர். அவரது அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ரியாசை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி காஞ்சிபுரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜகோபால், தலைமறைவாக இருந்த அரிகிருஷ்ணன், யுகேஷ் ஆகியோரை நேற்று மாலை கைது செய்தார். மேலும், தலைமறைவாக உள்ள பிரவீனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : Kanchipuram ,
× RELATED மாநில அணிக்கான வாலிபால் போட்டி