×

விமானம் பழுதால் 5 மணி நேரம் தவிப்பு பயணிகள் முற்றுகை போராட்டம்

சென்னை, ஏப்.12: துபாய் செல்ல வேண்டிய விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு காரணமாக 5 மணி நேரமாக காத்திருக்க வைத்ததால் ஆத்திரமடைந்த 182 பயணிகள் விமான நிலையத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய் செல்லும் எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 4 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் 182 பயணிகள் செல்ல இருந்தனர். அவர்கள் அனைவரும் அதிகாலை ஒரு மணிக்கு முன்பாகவே சென்னை விமான நிலையம் வந்து அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏற தயாராக காத்திருந்தனர். விமானி, விமானத்தில் பயணிகளை ஏற்றுவதற்கு முன்பு விமானத்தின் இயந்திரங்களை சரிபார்த்தார். அப்போது விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டதும், இந்த நிலையில் விமானம் வானில் பறப்பது  மிகவும் ஆபத்தானது என்பதையும் அறிந்தார். இதையடுத்து விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவித்தார். அதோடு விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

விமான பொறியாளர்கள் குழுவினர் விரைந்து வந்து விமானத்தை சீரமைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். இதனால், பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறாமல் ஓய்வு கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். 5 மணி நேரத்திற்கு மேலாகியும் இயந்திர கோளாரை சீரமைக்கும் பணி முடியவில்லை. இதனால், விமான நிலையத்தில் பயணிகள் தவித்துக் கொண்டிருந்தனர். பொறுமை இழந்த பயணிகள், ஆத்திரமடைந்து விமான நிலையத்தில் எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் கவுன்டரை சூழ்ந்து, முற்றுகை போராட்டம் நடத்தினர். அதிகாலை ஒரு மணிக்கு வந்து 8 மணி நேரமாக காத்திருக்கிறோம். குழந்தைகள் பசியால் அழுகின்றனர். எப்போது தான் விமானம் புறப்படும் என்று, ஆத்திரத்தோடு கேட்டனர். இதையடுத்து பயணிகளை அதிகாரிகள் சமாதானம் செய்து, விமானத்தில் வழங்க வேண்டிய உணவுகளை உடனடியாக வழங்கினர். குழந்தைகளுக்கு பால், பிஸ்கெட்களும் கொடுத்தனர். அதோடு விமானம் ரத்து செய்வதாக அறிவித்தனர். அதன்பின்பு பயணிகள் அனைவரையும் சொகுசு பஸ்களில் ஏற்றி சென்னை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைத்தனர். பழுது சரிசெய்யப்பட்டு விமானம் இரவு புறப்பட்டு சென்றது.

Tags :
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...