×

சென்னை விமான நிலையத்தில் பணி முடிந்து 3 மாதமாகியும் பயன்பாட்டிற்கு வராத பயணிகள் ஓய்வு கூடம்: வெளிநாட்டு பயணிகள் 3 மணி நேரம் வரை காத்திருக்கும் அவலம்

 

மீனம்பாக்கம்: சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகள் குடியுரிமை பிரிவில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து, அதன்பின்பு உடைமைகளை கன்வேயர் பெல்டில் இருந்து எடுத்துக்கொண்டு, சுங்கச் சோதனை முடித்து வெளியில் வருவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடுகிறது. அதன்பின்பும், பிக்கப் பாயின்டிற்காக மல்டி லெவல் கார் பார்க்கிங் செல்வதற்கு பேட்டரி வாகனங்களுக்கு நீண்ட நேரம் வரிசையில் நிற்கின்றனர். பல பயணிகள் பேட்டரி வாகனங்களை எதிர்பார்க்காமல் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, மல்டி லெவல் கார் பார்க்கிங், பிக்கப் பாயின்டிற்கு செல்கின்றனர். இதனால் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகள் விமான நிலையத்தில் பல இடங்களில் வரிசையில் காத்திருந்து வீடுகளுக்கு செல்வதற்குள் சுமார் 3 மணி நேரம் வரை தாமதம் ஏற்படுகிறது.

இந்தியாவில் உள்ள எந்த சர்வதேச விமான நிலையத்திலும், இதுபோல் பயணிகள் பல மணி நேரம் காத்திருந்து அவதிப்பட வேண்டிய அவசியம் இல்லை. சென்னை விமான நிலையத்தில் மட்டுமே அதேபோன்ற நிலை காணப்படுகிறது என்று பயணிகள் தரப்பில் தொடர்ந்து புகார்களை கூறி வருகின்றனர். இந்நிலையில், இந்திய விமான நிலைய ஆணையம், கடந்த 2023ம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருகை பகுதியில் டெர்மினல் 1 எதிரில் பயணிகள் வசதிக்காக பிக்கப் பாயின்டன் பிளாசா என்ற பயணிகள் ஓய்வு கூடம் பகுதியை அமைக்க முடிவு செய்தனர். அதன்படி தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டது. 2024ம் ஆண்டு அக்டோபரில் பணிகள் முடிவடைந்து பயணிகள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த பிளாசா பயணிகள் ஓய்வு கூடத்தில் பயணிகள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. குறிப்பாக பயணிகள் தங்களுடைய உடைமைகளை பாதுகாப்பாக வைத்து விட்டு, வெளியே சென்று வருவதற்காக பொருட்கள் பாதுகாப்பு அறைகள், பயணிகள் ஓய்வாக அமர்ந்து இருப்பதற்கு இருக்கைகள், செல்போன் சார்ஜிங் பாயின்ட்கள், சிற்றுண்டி, டீ, காபி, குளிர் பானங்கள் அருந்துவதற்கான சிறு உணவகங்கள், பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், ரெஸ்ட் ரூம்கள் உள்ளிட்டவைகள் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த பயணிகள் ஓய்வு கூடம் அருகே, பிக்கப் பாயின்ட் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் விமானத்திலிருந்து இறங்கி வெளியில் வரும் பயணிகள், மல்டி லெவல் கார் பார்க்கிங் சென்று, வாகனங்களில் ஏறி வீடுகளுக்கு செல்லும் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என்று கூறப்பட்டது.

இதுபோன்ற பல்வேறு வசதிகளுடன் பயணிகளுக்காக அமைக்கும் பிளாசா ஓய்வு கூடம் செயல்பாட்டுக்கு வந்து விட்டால் தங்களுக்கு பல்வேறு வசதிகள் கிடைக்கும். தங்களுடைய பிரச்னைகளும் குறையும் என்று பயணிகளும் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் 2024 அக்டோபரில் முடிய வேண்டிய பணிகள் 2026ம் ஆண்டு மே மாதம் வரை நடந்தது. பணிகள் அனைத்தும் முடிந்து திறப்பு விழாவுக்கு தயாராக இருக்கும் இந்த பயணிகள் ஓய்வு கூடமான பிளாசா இதுவரையில் செயல்பாட்டுக்கு வராமல் முடங்கிக் கிடக்கிறது. சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜூலை மாதம் இரண்டாவது வாரத்திற்குள் பிளாசா செயல்பாட்டிற்கு வந்துவிடும் என்று தெரிவித்தனர். ஆனால் இப்போது ஜூலை மாதம் முழுவதும் முடிந்து, ஆகஸ்ட் மாதமும் தொடங்கி விட்டது. ஆனாலும் செயல்பாட்டுக்கு வராமல் தொடர்ந்து முடங்கி கிடக்கிறது. எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகளை கேட்டால் மவுனமாக‌ உள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இடத்தில் அவர்கள் வசதிகளுக்காக அமைக்கப்பட்ட பிளாசா என்ற ஓய்வு கூடம் பணிகள் முடிந்த பின்பும் திறப்பதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்படுவது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது. இதுகுறித்து விமான நிலைய வட்டாரங்கள் தரப்பில் விசாரித்த போது, இந்த பயணிகள் ஓய்வு கூடமான பிளாசா பணிகள் முடிந்து விட்டாலும் இதை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அனுமதி வர வேண்டும். அந்த அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதால் பணிகள் முடிந்தும் 3 மாதங்களாக செயல்பாட்டுக்கு வராமல் இருப்பதாக கூறுகின்றனர்.

எனவே இந்திய விமான நிலைய ஆணையம் முயற்சி மேற்கொண்டு விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று, இந்த பயணிகள் ஓய்வு கூடமான பிளாசாவை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விமான பயணிகள் தரப்பில் கூறுகின்றனர்.

Tags : Chennai Airport ,Meenambakkam ,Chennai International Airport ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு...