ஊத்துக்கோட்டை அருகே மந்தகதியில் 6 வழிச்சாலை பணிகள்: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

 

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே மந்தகதியில் நடைபெறும் 6 வழிச்சாலைப்பணிகளால், போந்தவாக்கம் வரை முடிவடைந்த சாலையால் ஊத்துக்கோட்டை பகுதியில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள், மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் – முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 128 கி.மீ.தூரத்திற்கு ரூ.3200 கோடி மதிப்பீட்டில் 6 வழிச்சாலை அமைக்க ஒன்றிய அரசு நிதி ஒதுக்க தமிழக அரசும் ஆந்திர அரசும் இணைந்து தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற முடிவு செய்துள்ளது. இதற்காக ஊத்துக்கோட்டை வட்டத்தில் 6 வழிச்சாலைக்காக 18 கிராமங்களும், பள்ளிப்பட்டு மற்றும் பொன்னேரி வட்டத்தில் தலா 6 கிராமங்களும் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், ஊத்துக்கோட்டை அருகே போந்தவாக்கம் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரையில் 99 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 வழிச்சாலைப்பணிகள் முடிவடைந்து விட்டது.

தற்போது போந்தவாக்கம் முதல் சித்தூர் வரை போக்குவரத்து தொடங்கியுள்ளது. இதனால், ஆந்திர மாநிலத்தில் இருந்து 6 வழிச்சாலை வழியாக வரும் கனரக வாகனங்கள் ஊத்துக்கோட்டை வந்து சென்னை செல்கிறது. இதனால், ஊத்துக்கோட்டை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், போந்தவாக்கம் பகுதியில் இருந்து தச்சூர் வரையிலான 29 கிலோ மீட்டர் தூரமுள்ள ஜெயபுரம் ஆலப்பாக்கம், வடமதுரை, செங்காத்தாகுளம், தும்பாக்கம், தொளவேடு, சென்னங்காரணி ஆகிய பகுதிகளில் 6 வழிச்சாலை பணிகள் மந்தகதியில் நடக்கிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: தச்சூர் முதல் சித்தூர் வரை 6 வழிச்சாலை பணிகள் 128 கிலோ மீட்டர் உள்ளது. இதில், போந்தவாக்கம் முதல் சித்தூர் வரை பணிகள் முடிந்து விட்டது. மீதமுள்ள 29 கிலோ மீட்டர் சாலை பணிகள் மந்தகதியில் நடைபெறுகிறது.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் அடுத்த வருடம் ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும் மண் பற்றாக்குறையால் பணிகள் தாமதமாக நடக்கிறது என கூறுகின்றனர். மேலும், போந்தவாக்கம் வரை முடிவடைந்த சாலையால் ஊத்துக்கோட்டை பகுதியில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இதை கட்டுப்படுத்த போந்தவாக்கம் முதல் தச்சூர் வரையில் மீதமுள்ள 29 கிலோ மீட்டர் தூரமுள்ள 6 வழிச்சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: