*பயன்பாட்டிற்கு திறக்க மக்கள் வலியுறுத்தல்
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில், ரூ.16 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மீன் விற்பனை நிலையங்களை முறையாக பயன்பாட்டிற்காக திறந்து வைத்திட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மீன் உற்பத்தியில் கிருஷ்ணகிரி அணை, கெலவரப்பள்ளி அணை, பாரூர் பெரிய ஏரி ஆகியவை பிரதான இடத்தை பிடித்துள்ளன. அத்துடன் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் மீன் தேவைகளை கிருஷ்ணகிரி நகரின் அருகில் உள்ள சின்னஏரி, கரிம் சாயபு ஏரி, தேவசமுத்திரம் ஏரி ஆகிய ஏரிகள் நிறைவேற்றி வருகின்றன. இதுதவிர, அவதானப்பட்டி ஏரியில் இருந்தும், மீன்கள் பிடிக்கப்பட்டு தினந்தோறும் சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது.
இதனால், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மீன்கள் கிடைக்கிறது. இந்த ஏரி-அணைகளில் பிடிக்கப்படும் மீன்கள், ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் உள்ள மீன் விற்பனை கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் விற்பனை களை கட்டும். அத்துடன் ஆந்திராவில் இருந்தும், விற்பனைக்காக கொண்டு வரப்படும் மீன்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மீன்வளத் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதில், 100 சதவீத மானியத்தில் மீனவர் கூட்டுறவுச் சங்கத்துக்கு, நவீன மீன் விற்பனை நிலையங்கள் கட்டி வழங்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக நீர்ப்பிடிப்புப் பகுதியில் பிடிக்கப்படும் மீன்கள் மற்றும் கடல் மீன்களை விற்பனை செய்யும் வகையில், கிருஷ்ணகிரி அணை மற்றும் கட்டிகானப்பள்ளி பகுதியில் தலா ரூ.8 லட்சம் மதிப்பில் நவீன மீன் விற்பனை நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த மீன் விற்பனை நிலையங்கள் திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. இதனால், கட்டிடங்கள் சிதிலமடைந்து பாழாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கோவிந்தராஜ் உள்ளிட்ட மீன் பிரியர்கள் கூறியதாவது: ஓசூர், பாரூர் பகுதிகளில் மீன்வளத்துறை சார்பில், நவீன மீன் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. கிருஷ்ணகிரி அணை சிறுவர் பூங்கா அருகே, நவீன மீன் விற்பனை நிலையம் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில், பல மாதங்களாக மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படாமல் உள்ளது.
மேலும், கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு செல்லும் சாலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன மீன் விற்பனை நிலையமும் திறக்கப்படாமல் உள்ளது. எனவே, மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கட்டி முடிக்கப்பட்ட இரு மீன் விற்பனை நிலையங்களையும், உடனடியாக திறக்க மீன்வளத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
