×

ஆடிப்பெருக்கு!

ஆடி மாதம் 18-ம் நாளைதான் நாம் ஆடிப் பெருக்கு என்கிறோம். இது நம் தமிழ்நாட்டில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. காவிரி அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாக ‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்று சொல்வது வழக்கம். ஆடி மாதமே சிறப்பு வாய்ந்த மாதம் என்றாலும், செவ்வாய், வெள்ளி போன்ற கிழமைகளில் அம்மன் கோயில்களிலும், கார்த்திகை அன்று முருகன் கோயில்களில் விசேஷம்.

ஆடிப்பெருக்கன்று சுமங்கலிப் பெண்களுக்கு ‘தாலி பிரித்துப் போடுவது’ என்பது தொன்று தொட்டு வரும் ஒரு பழக்கமாகும். புது மணத் தம்பதிகளை பெண்ணின் பிறந்த வீட்டிற்கு அழைத்து, அருகிலுள்ள நதிக்கரையில் வெற்றிலை பாக்கு, பூ, பழ வகைகள், காப்பரிசி செய்து எடுத்துக் கொண்டு காவிரி அன்னைக்கு படையலிட்டு புது தாளிச் சரடையும் வைத்து நிவேதனம் செய்து, புதுப்பெண்ணின் கழுத்தில் வயதில் பெரிய சுமங்கலிப் பெண்கள் கட்டிவிடுவது வழக்கம். முன்பே திருமணமானவர்கள் கூட திருமாங்கல்யத்தை புதுக் கயிற்றில் மாற்றிக் கொள்ள இந்த நாள் சிறந்த நாள் எனக் கருதுவர்.

காவிரி அன்னைக்கு ‘காதோலை, கருகமணி என்ற பனை ஓலையில் சிவப்பு வர்ணம் அடித்து, சுருளாக வைத்து அதில் சின்ன கருப்பு வளையல் கோர்த்திருக்கும் ஒரு பொருளை ஆற்றிலிட்டுப் பூ தூவுவார்கள். காவிரி அன்னைக்கு வளைகாப்பிட்டு அவளை மகிழச் செய்வதாக ஓர் ஐதீகம்.

தற்போது ஆறு, குளம், கிணறு இல்லாமல் போய்விட்டாலும், ஃப்ளாட் போன்ற இடங்களில் குடியிருப்பதாலும், மக்கள் ஒரு பாத்திரத்தில் நிறைய நீரூற்றி வைத்து, அதற்கு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து, அந்த நீரை காவிரி அன்னையாக பாவித்து வளமுடனும் வாழ வேண்டுமென்று வணங்குகிறார்கள். இந்த நல்ல நாளில் தொடங்கும் எந்தக் காரியமும் வெற்றி பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

– கே.நாகலட்சுமி, சென்னை.

Tags : Peru ,Tamil Nadu ,Audi ,
× RELATED ஆடிப் பெருக்கு தாலிப் பெருக்கு