சென்னை: ஆடிப்பெருக்கு அன்று ஆவணப் பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
சார்பதிவாளர் அலுவலகங்களில் பொதுவாக சுபமுகூர்த்த மற்றும் சிறப்பு நாட்களில் அதிக அளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும். அத்தகைய நாட்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வழக்கமான அளவை விடக் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம்.
இந்நிலையில், வரும் திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படவுள்ளது. அந்த நாளில் அதிக அளவில் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப்பதிவு செய்வார்கள். அதன் அடிப்படையில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக பதிவுத்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பதிவுத்துறைத் தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பெருக்கு தினத்தன்று (3.8.2026) அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
எனவே, அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்கள் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
