துரைப்பாக்கம், ஜூலை 30: கொட்டிவாக்கம் பகுதியில் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஈசிஆரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை கொட்டிவாக்கம், களத்துமேடு சுவாமிநாதன் நகர் பகுதியில் நேற்று முன்தினம் காலை முதல் தொடர்ச்சியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் மின் விநியோகம் சீராகாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் இரவு ஈசிஆரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து தகவலறிந்த நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி உடனடியாக மின் விநியோகத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியல் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.
