×

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உடல்களை மாற்றி ஒப்படைத்த விவகாரம் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவு: ஊழியர்களிடம் விளக்கம் சேகரிப்பு

சென்னை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இளம்பெண்கள் உடல்களை மாற்றி ஒப்படைத்த விவகாரத்தில் தடயவியல் மருத்துவரிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மணலி, கிராம தெருவை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (18). கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்த இவர், குடும்ப பிரச்னை காரணமாக, கடந்த 2 நாட்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த மணலி போலீசார், மாணவி உடலை பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பின், உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. மணலியில் வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட மாணவியின் உடலை, உறவினர்கள் பார்த்த போது, அது பிரியதர்ஷினியின் உடல் இல்லை என்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்தவர்கள், தவறுதலாக மாற்றி வழங்கப்பட்ட மாணவியின் உடலை, மீண்டும் ஸ்டான்லி அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். மாற்றி வழங்கப்பட்ட மாணவியின் உடலை ஒப்படைத்து விட்டு, பிரியதர்ஷினியின் உடலை வாங்கி வந்து, இறுதி சடங்கு செய்தனர்.

விசாரணையில், திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கம், மேட்டு காலனியை சேர்ந்த அனுஷ்கா (17), என்பவர், தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவரது உடலை ஆரம்பாக்கம் போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அனுஷ்காவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், தவறுதலாக மணலியைச் சேர்ந்த பிரியதர்ஷினியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது தெரிந்தது. இச்சம்பவம், இரு தரப்பு உறவினர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல்கள் மாற்றி ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, அன்றைய தினம் பணியில் இருந்த தடயவியல் துறை உதவி பேராசிரியரிடம் மருத்துவமனை முதல்வர் விளக்கம் கோரியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் நடைமுறையில் இந்த தவறு எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து விரிவான, துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பவம் தொடர்பான அனைத்து ஆவணங்களும், பதிவேடுகளும் மற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களின் விளக்கங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. விசாரணை அறிக்கையின் அடிப்படையில், இந்த பிரச்னைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், முழுமையான அறிக்கையை தயாரித்து மருத்துவக் கல்வி இயக்ககத்திற்கு அனுப்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசு மருத்துவமனையில் உடல்களை அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைக்கும் நடைமுறையிலேயே இந்த குளறுபடி ஏற்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மருத்துவமனைகளில் பின்பற்றப்படும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இந்த விவகாரத்தின் விசாரணை அறிக்கை வெளியான பின்னர் அடுத்தகட்ட நிர்வாக மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : Stanley Government Hospital ,Chennai ,Priyadarshini ,Grama Street, Manali, Chennai ,
× RELATED நகை, துணிக்கடைகளில் நெரிசலை...