×

போதையில் சொகுசு கார் ஓட்டி விபத்து தொழிலதிபர் கோரிக்கை நிராகரிப்பு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: சென்னை எழும்பூரில் மதுபோதையில் சொகுசு காரை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்திய வழக்கில் தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமன் என்பவர் விசாரணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து இந்த நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‘இந்த விவகாரத்தை பொருத்தவரையில் விசாரணை நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராக வேண்டும் என்பதில் இருந்து எங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். ஏனெனில், ஷாஜி புருஷோத்தமன் முதுகு தண்டுக்கு சிகிச்சை எடுத்து வருவதால் அவரால் எழுந்து நிற்க கூட முடியாது. அதனை அடிப்படையாக கொண்டு தான் இந்த கோரிக்கையை வைத்துள்ளோம்.

அதேப்போன்று வழக்கின் விசாரணை வரும் 30ம் தேதி வரவுள்ளதால், அன்றைய தினம் காணொளி வாயிலாக ஆஜராக அனுமதிக்க வேண்டும். மேலும் வழக்கில் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டால், இரண்டு வாரத்திற்குள் சரணடைவேன் என்ற உத்தரவாதத்தையும் தற்போது அளிக்கின்றேன்,’ என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் கூறியதில், ‘இந்த விவகாரத்தில் உங்களது நடவடிக்கை என்பது வழக்கின் விசாரணையை இழுத்தடிப்பு செய்வது போன்று உள்ளது. மேலும் மனுதாரருக்கு முதுகு தண்டு சிகிச்சை அளிப்பதாக இருந்தால், அதுகுறித்த விளக்கத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள்.

இதில் உங்களது கோரிக்கையால் மட்டுமே அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல், வரும் 30ம் தேதி நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க முடியாது,’ என்று நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கேட்டார். இதையடுத்து அதற்கு அனுமதி வழங்கிய நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : Supreme Court ,Chennai ,Shaji Purushothaman ,Egmore ,
× RELATED நகை, துணிக்கடைகளில் நெரிசலை...