×

சிறுத்தை பட பாணியில் கொரோனா மொட்டைக்கு ரூ.15,000 கிப்ட் என மோசடி 3 பெண்கள் ஏமாற்றம் பலர் தப்பினர்

ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புதுகொத்தாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பழனியம்மாள் (30). இவருக்கு, கடந்த 26ம் தேதி இரவு 8 மணியளவில், மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர், தான் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து தாசில்தார் பேசுவதாக கூறி, பழனியம்மாளின் பெயர், குடும்ப உறுப்பினர்களது பெயர்களை கூறியுள்ளார். தொடர்ந்து, கொரோனா போன்று புதுவிதமான நோய் பரவி வருகிறது.

இந்த நோய் தலைமுடி வழியாக பரவுவதால், வெளி நாடுகளில் மொட்டை அடித்துக் கொண்டு நோயில் இருந்து தப்பித்துள்ளனர். அவ்வாறு, மொட்டை அடித்தால் நோய் தாக்கம் ஏற்படாது. எனவே, மொட்டை அடிக்கும் நபர்களுக்கு அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்குவதாகவும், பெண்கள் என்றால் ரூ.15 ஆயிரம், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு ரூ.45 ஆயிரம் மற்றும் லேப்டாப், ஆண்களுக்கு ரூ.6,000 வழங்கப்படும் என கூறியுள்ளார்.

அதற்காக வாட்ஸ்அப் மூலமாக, 10 வயது குழந்தைகள் முதல் மூதாட்டி வரை மொட்டை அடித்துள்ள போட்டோக்களை அனுப்பியுள்ளார். அத்துடன் பணம் கட்டு, கட்டாக இருக்கும் புகைப்படத்தையும் அனுப்பி வைத்துள்ளார்.  புதுகொத்தாம்பாடிக்கு 18 டோக்கன் மட்டுமே உள்ளதால், உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கலாம். 27ம் தேதி (நேற்று முன்தினம்) மதியம் 2 மணியளவில், பணத்துடன் வருவதாகவும், நாங்கள் வருவதற்குள், மொட்டை அடித்து தயார் நிலையில் உள்ளவர்களுக்கு, அதிகாரிகள் பணம் வழங்குவார்கள் என, அந்த நபர் கூறியுள்ளார்.

அவரின் பேச்சை நம்பிய 20 பேர், மொட்டை அடிக்க தயாராகினர். இதில், காவேரி (56), ராமாயி (58), சித்ரா (60) ஆகிய மூன்று பேர் மொட்டை அடித்த நிலையில், பணம் தருவதாக கூறிய நபரை தொடர்பு கொண்டபோது, அவரது போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.அதன் பிறகு தான், மொட்டை அடிக்கச் சொல்லி ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து, மற்ற நபர்கள், மொட்டை அடிப்பதை தவிர்த்தனர்.

இதுகுறித்து, புதுகொத்தாம்பாடியை சேர்ந்த பழனியம்மாள் கூறுகையில், ‘ஆத்தூர் தாசில்தார் பேசுவதாகவும், புதுவித நோய் பரவுவதை தடுக்க, மொட்டை அடிக்க வேண்டும். மொட்டை அடிப்பவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றனர். அவர்கள் வந்து பணம் கொடுப்பார்கள் என டேபிள், சேர் போட்டு தயார் நிலையில் இருந்தோம்.

ஆனால், மதியம் 3 மணிக்கு மேல், அவரது செல்போனை தொடர்பு கொள்ள முடியவில்லை’ என்றார். சிறுத்தை பட பாணியில் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக, ஜெயங்கொண்டம் மேட்டுகுப்பத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சதஷ்குமார் (39) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Attur ,Palaniammal ,Pudukothambadi ,Salem district ,Tahsildar ,Attur taluka ,
× RELATED தமிழகத்தில் 31ம் தேதி வரை வெப்பம் 2-4 டிகிரி செல்சியஸ் கூடும்