×

முறைப்படி புகார் அளித்தும் காத்திருப்பு; போலீஸ் வாகனத்தை மறித்த பெண்ணுக்கு பாலியல் அச்சுறுத்தல்: சமூக வலைதளத்தில் தொடரும் கொடூரம்

மும்பை: மும்பையில் போலீஸ் வாகனத்தை மறித்து போராட்டம் நடத்திய இளம்பெண்ணுக்கு இணையதளத்தில் பாலியல் அச்சுறுத்தல்கள் வந்ததை அடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை தாதரில் உள்ள சிவாஜி பூங்காவில் கடந்த 22ம் தேதி மழைக்கு நடுவே நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து இளைஞர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கைது செய்யப்பட்ட இளைஞர்களை ஏற்றிச் சென்ற போலீஸ் வாகனத்தின் முன் நின்று ரியா யாதவ் என்ற ரியா அகீர் தைரியமாக வழிமறித்தார்.

இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், அவருக்கு எதிராக இணையவழியில் திட்டமிடப்பட்ட வெறுப்புப் பிரசாரம் பரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று மும்பை எம்.ஐ.டி.சி., போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்ற ரியா அகீர், தனக்கு எதிராக இணையவழி துன்புறுத்தல்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக புகார் அளித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘சைபர் கிரைம் இணையதளத்தில் ஏற்கனவே புகார் அளித்திருந்தேன். எனது புகாரை முறைப்படி பதிவு செய்ய நாள் முழுவதும் காவல் நிலையத்தில் காத்திருந்தேன். எனது புகைப்படங்களை தவறாக சித்தரித்து, இணையத்தில் பாலியல் ரீதியாகவும் அவதூறாகவும் பேசி அச்சுறுத்துகின்றனர். எனது குடும்பத்தினரை இது பாதிக்கக்கூடாது என்பதால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

Tags : Mumbai ,Shivaji Park ,Dadar, Mumbai, Maharashtra… ,
× RELATED ‘வான்டார்’ நிறுவனம் வெளியிட்ட பகீர்...