ஐதராபாத்: நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாணின் மனைவி அன்னா, தனது பெயரை ‘அன்னா கொனிடேலா’ என்று அழைக்குமாறு ரசிகர்களுக்கு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா நாட்டில் பிறந்து மாடலிங் மற்றும் நடிகையாக வலம் வந்த அன்னா லெஸ்னேவா, கடந்த 2011ம் ஆண்டு ‘தீன்மார்’ தெலுங்கு படப்பிடிப்பின் போது தற்போதைய ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணை முதன்முதலாக சந்தித்தார். தொடர்ந்து இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில், சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் கடந்த 2013ம் ஆண்டு முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். பவன் கல்யாணுக்கு ஏற்கனவே நந்தினி மற்றும் ரேணு தேசாய் ஆகியோருடன் நடந்த திருமணங்கள் விவாகரத்தில் முடிந்த நிலையில், அன்னாவை மூன்றாவதாக கரம்பிடித்தார்.
இவர்களுக்கு மார்க் சங்கர் பவனோவிச் என்ற மகனும், அன்னாவின் முந்தைய திருமணத்தின் மூலம் பிறந்த பொலினா அஞ்சனா பவனோவா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக இணைந்துள்ள அன்னா கொனிடேலா, தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், ‘எனது திருமணம் பற்றிய செய்தி ஊடகங்களில் வெளியானபோது அனைவரும் என்னை அன்னா லெஸ்னேவா என்றே குறிப்பிட்டனர். ஆனால் எனது திருமண சான்றிதழ் தான் அந்த லெஸ்னேவா என்ற குடும்ப பெயருடன் வெளியான கடைசி அதிகாரப்பூர்வ ஆவணமாகும். பவன் கல்யாணை திருமணம் செய்த நாளிலிருந்தே சட்டப்பூர்வமாக எனது குடும்ப பெயரை ‘கொனிடேலா’ என மாற்றிக்கொண்டேன். தயவுசெய்து என்னை ‘அன்னா கொனிடேலா’ என்று அழையுங்கள். அதுவே எனது உண்மையான பெயர், அப்பெயரே எனக்கு முழுமையான உணர்வையும் தருகிறது’ என்று தெரிவித்துள்ளார்.
