திருவள்ளூர்: திருவள்ளூர் – பூந்தமல்லி நெடுஞ்சாலையில், திருவள்ளூர் அடுத்த முருக்கஞ்சேரி பகுதியில் நெடுஞ்சாலை ஓரத்தில் உயரழுத்த மின்கம்பம் உள்ளது. இதன் மீது இன்று காலை திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மோதியதில் மின்கம்பம் உடைந்து நெடுஞ்சாலையின் குறுக்கே விழுந்தது. அந்த சமயத்தில், சாலையில் சென்றுக்கொண்டிருந்த 3 பைக்குகள் மீது விழுந்ததால் பைக்கை போட்டுவிட்டு அதில் வந்தவர்கள் ஓடிச்சென்றுவிட்டதால் உயிர் தப்பினர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மணவாளநகர் போலீசாரும் மின்வாரிய அதிகாரிகளும் விரைந்து வந்தனர். பின்னர் மின் இணைப்பை துண்டித்து சாலையில் விழுந்துகிடந்த மின்கம்பம், வயர்களை அப்புறப்படுத்தினர். இதன்பிறகு புதிய மின்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, மின்கம்பத்தின் மீது மோதிவிட்டு சென்ற லாரியை மணவாளநகர் போலீசார் பிடித்தனர். இதுசம்பந்தமாக லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக புட்லூர், அரண்வாயல், முருக்கஞ்சேரி, அரண்வாயல்குப்பம் மற்றும் திரூர் உள்பட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
