சென்னை, ஜூலை 28: ராஜா அண்ணாமலைபுரத்தில் வளர்ப்பு நாய் கடித்து குதறியதில், பெண் தூய்மை பணியாளர் படுகாயமடைந்தார். இதுதொடர்பாக நாயின் உரிமையாளரான தம்பதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை ராஜா அண்ணாமலைபுரம் குட்டி கிராமினி தெருவை சேர்ந்தவர் உமாராணி (40). இவர் காமராஜர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் பணி முடிந்து கடந்த 25ம் தேதி மொபட்டில் வீட்டிற்கு சென்றுள்ளார். பிறகு மொபட்டை வீட்டிற்குள் நிறுத்த முயன்ற போது, பக்கத்து வீட்டில் உள்ள வளர்ப்பு நாய் ஒன்று, திடீரென உமாராணி மீது பாய்ந்து கடித்து குதறியது.
இதில் உமாராணிக்கு கை, கால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் உமாராணியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து உமாராணியின் கணவர் சுரேஷ் (45) நேற்று முன்தினம் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி நாய் உரிமையாளரான குமார் (68) மற்றும் அவரது மனைவி கோட்டீஸ்வரி (56) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
