சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் 2 ஆயிரத்து 708 உதவி பேராசிரியர் பணிக்கான நேரடி தேர்வு குறித்து கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் சுமார் 42 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்ததில் மிகப்பெரிய குழப்பம் உள்ளதால், உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு தடை விதிக்கவேண்டும் எனக்கோரி அண்ணாமலையின் ”வீ த லீடர்ஸ்” இயக்கத்தைச் சேர்ந்தவர் கரு நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.அவரது மனுவில், சுதந்திரமான நிபுணர்கள் குழுவை அமைத்து தேர்வில் விடைத்தாள் மதிப்பீடு செய்தது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் எப்படி பாதிக்கப்படுகிறார்? பணி தொடர்பான விவகாரத்தில் பொது நல வழக்கு எப்படி விசாரணைக்கு உகந்தது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.அதற்கு மனுதாரர் தரப்பில், கல்வி கொள்கை தொடர்பான வழக்கு என்பதால் விசாரணைக்கு உகந்தது என்று விளக்கமளிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஏற்கனவே தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டன.
தேர்வு நடைமுறையை எதிர்த்து வழக்கு தொடராத நிலையில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர். இதையடுத்து, மனுவை திரும்பப் பெறுவதாகவும், புதிதாக மனுதாக்கல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவை திரும்பப் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
