நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் அரசு வக்கீல் பொறுப்பு வழங்க பெண் ஒருவரிடம், த.வெ.க. நிர்வாகி பேரம் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் த.வெ.க ஆட்சி பொறுப்பேற்ற பின், கடந்த திமுக ஆட்சியில் இருந்த அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதே போல் அரசு வக்கீல்கள் பொறுப்பில் இருந்தவர்களும் ராஜினாமா செய்து, த.வெ.க.வை சேர்ந்த வக்கீல்கள், அரசு வக்கீல்கள் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டனர்.
அரசு வக்கீல்கள் பொறுப்புக்கு லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்து, நீதிமன்றம் வரை விவகாரம் சென்றது. இது தமிழ்நாடு முழுவதும் வக்கீல்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்தநிலையில் குமரி மாவட்டத்திலும் அரசு வக்கீல்களை நியமிக்க, சிலரிடம் பேரம் பேசப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழகத்தை சேர்ந்த பெண் வக்கீல் ஒருவரிடம், தவெக நிர்வாகி பேசுவது போன்ற ஒரு ஆடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
இதில் அந்த பெண் வக்கீலிடம் பேசும் அந்த த.வெ.க. நிர்வாகி, நீங்கள் அரசு வக்கீலுக்கு விருப்பம் தெரிவித்து இருப்பதை அறிந்தேன். பலரும் இந்த பொறுப்புக்கு வர ஆசைப்படுகிறார்கள். நீங்கள் கட்சியை சேர்ந்தவர் என்பதால், உங்கள் பெயரை பரிந்துரைக்கலாம். அதற்கு ரூ.15 லட்சம் என்றால் ஓ.கே. செய்யலாம். 10 நாளில் போஸ்டிங் வந்து விடும். அதன் பின்னர் எளிதில் சம்பாதித்து விடலாம். பத்திரப்பதிவு அலுவலகத்திலேயே கடந்த திமுக ஆட்சியில் நிறைய பெண்டிங் பைல்கள் உள்ளன. இந்த நிலங்களுக்கு பத்திரப்பதிவு தொடர்பாக, அரசு வக்கீலிடம் இருந்து கண்டிப்பாக கருத்துரு கேட்பார்கள். அதன் மூலம் சம்பாதிக்க முடியும். நீங்கள் யோசிக்காதீர்கள். உடனடியாக பணம் தயார் செய்ய முடியுமா? என்று பாருங்கள் என்கிறார்.
அதற்கு அந்த பெண் வழக்கறிஞர் அவ்வளவு பணம் எல்லாம் முடியாது சார் என்கிறார். உடனடியாக அந்த நிர்வாகி கடைசியாக ரூ.12.50 லட்சம் என்றால் பார்க்கலாம் என்கிறார். ஆனால் அந்த பெண் வழக்கறிஞர் அவ்வளவு எல்லாம் தர முடியாது. த.வெ.க.வில் பணியாற்ற வேண்டும் என எனக்கு மிகவும் ஆசை. கடந்த தேர்தலில் நான் மட்டுமல்ல, எனது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்பட எனக்கு தெரிந்த அனைவரிடமும் த.வெ.க.வுக்கு தான் ஓட்டு போட சொன்னேன். கட்சி பணி செய்ய எனக்கு ரொம்ப ஆசை. அதுவும் அரசு வக்கீல் போன்ற பொறுப்பு இருந்தால் ஆர்வமாக பணியாற்ற வாய்ப்பாக இருக்கும் என்று எண்ணினேன். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது எல்லாம் எனது ஆசை இல்லை. நான் வழக்கறிஞராக பதிவு செய்து 7 வருடங்கள் ஆகின்றன. அரசு வக்கீலுக்கு தகுதியானவள் தான். மற்றப்படி நீங்கள் கேட்கும் பணம் எல்லாம் இல்லை சார்… என்கிறார்.
இவ்வாறு அந்த உரையாடல் முடிகிறது. இந்த உரையாடல் தற்போது சமூக வலை தளங்களில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கட்சி தலைமைக்கும் அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக கட்சி மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார். கட்சி வக்கீலிடமே தவெக நிர்வாகி பேரம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
