×

பல்லடம் அரசு மருத்துவமனையில் பிணவறை சுற்று சுவரை சீரமைக்க எதிர்பார்ப்பு

பல்லடம் : பல்லடம் அரசு மருத்துவமனையில் பழுதடைந்துள்ள பிணவறை சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு தினமும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். 90 படுக்கைகளுடன் உள்நோயாளி பிரிவு செயல்படுகிறது.

மேலும் பல்லடம் மற்றும் சுற்று வட்டார கிராமங்கள் மற்றும் கோவை மாவட்டத்தை சேர்ந்த சுல்தான்பேட்டை மற்றும் செஞ்சேரிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற பகுதிகளில் நடைபெறும் சாலை விபத்து மற்றும் நோயால் அவதிப்படுபவர்களும் பல்லடம் அரசு மருத்துவமனையை நம்பியே உள்ளனர். விபத்து மற்றும் தற்கொலை சம்பவங்களில் இறந்து போனவர்களின் உடலை வைக்க அரசு மருத்துவமனை பின்புறம் பிணவறை உள்ளது. இதன் சுற்றுச்சுவர்கள் சிதிலமடைந்து எந்த நேரமும் இடிந்து விடும் அபாய நிலையில் உள்ளது.

இதனால் பிணவறையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் சுற்றுச்சுவர் இடிந்த நிலையில் இருப்பதால் பிணவறைக்கான தனி வழியின் வாயிற்கதவுகள் திறக்கப்படுவதில்லை. அக்கதவுகள் மூடியே கிடக்கிறது. இதனால் பிணவறைக்கு வரும் பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்குள் சென்று பின்புறமாக சுற்றி வரும் நிலை உள்ளது.

பிரேத பரிசோதனை செய்த சடலங்களும் அமரர் ஊர்தியில் ஏற்றி நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுகள் வழியாக மருத்துவமனையின் பிரதான வாயில் வழியாகவே எடுத்து செல்லப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே பிணவறை சுற்றுச் சுவரை உடனடியாக சீரமைத்து பிணவறைக்கான தனி வழியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Palladam Government Hospital ,Palladam ,Tiruppur district ,
× RELATED பூண்டி நீர்த்தேக்கத்தில் அதிகளவு...