×

பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் 2வது வாரம் ஆடி திருவிழா: 50 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

 

ஊத்துக்கோட்டை, ஜூலை 27: பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் 2வது வாரம் ஆடி திருவிழா நடைபெற்றது. இதில் 50 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பெரியபாளையத்தில் புகழ் பெற்ற  பவானி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் ஆடித்திருவிழா கடந்த ஜூலை 17ம் தேதி தொடங்கியது. இந்த விழா சனி, ஞாயிற்றுக்கிழமை என 10 வாரங்கள் நடைபெறும். இத்திருவிழாவிற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் இருந்து கார், பஸ், வேன், ஜீப், லாரி, ஆட்டோ, மாட்டு வண்டி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வருவது வழக்கம். மேலும் சனிக்கிழமை இரவு இங்கு தங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைத்து, மொட்டையடித்து, வேப்பிலை ஆடை அணிந்து கோயிலை வலம் வந்தும் ,ஆடு, கோழிகளை பலியிட்டும் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.

அவ்வாறு ஆடித்திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , பொன்னேரி, ஊத்துக்கோட்டை, மூலக்கடை , செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அரசு பஸ்கள், மாநகர பஸ்கள், தனியார் பஸ்கள் என நூற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆடித்திருவிழா நேற்று 2வது வாரம் என்பதாலும், ஆடி மாதத்தில் 2வது ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் 50 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். மேலும் இதை தொடர்ந்து மாலை உற்சவரான பவானி அம்மன் பெரியபாளையத்தில் உள்ள முக்கிய வீதிகளில் வீதியுலா வந்தது. இதை பக்தர்கள் அனைவரும் தேங்காய் உடைத்து அம்மனை வழிபட்டனர்.

திருட்டு சம்பவத்தை தடுக்க சிசிடிவி பக்தர்கள் கோரிக்கை
பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் பல்வேறு பகுதிகளில் இருந்து அம்மனை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் நிற்கும்போது சில மர்ம நபர்கள் செயின், செல்போன் திருட்டில் ஈடுபடுகிறார்கள் . மேலும் பொங்கல் மண்டபம், குளியலறை போன்ற பகுதிகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு நடக்கிறது. இதை தடுக்க மருத்துவமனை சாலை, பிடிஒ ஆபீஸ் சாலை, மேல்நிலைப்பள்ளி மற்றும் மேம்பாலம் மீதும், அரியபாக்கம் பகுதிகளிலும், பஜார் பகுதியிலும் சிசிடிவி கேமரா பொறுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் , பாதுகாப்பிற்கு கூடுதல் போலீஸ் நியமிக்க வேண்டும் எனவும் பக்தர்கள் கூறினர்.

 

Tags : Periypalayam Bhavani Amman Temple 2nd week Aadi festival ,Uthukottai ,2nd week Aadi festival ,Periypalayam Bhavani Amman Temple ,Bhavani ,Amman Temple ,Periypalayam ,
× RELATED திமுகவில் இணைந்த பாமக நிர்வாகிகள்