சத்தியமங்கலம், ஜூலை 27: சத்தியமங்கலம்-மைசூர் சாலையில் கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை காட்டு யானை வழிமறித்து கரும்பை ருசித்தது. இதனால், அப்பகுதியில் சிறிந்து நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சிறுத்தை, புலி, கரடி, யானை போன்ற வனவிலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. மேலும், சத்தியமங்கலம் மைசூர் செல்லும் சாலையில் காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் நடமாடி வருவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், பகல் நேரத்தில் காட்டுயானைகள் சாலையில் நடமாடி வருவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலையில் சத்தியமங்கலம் மைசூர் சாலையில் ஏராளமான வானகங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது, வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை திடீரென சாலையில் வந்தது. காட்டு யானை சாலையில் நிற்பதை பார்த்த வாகன ஓட்டிகள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். அப்போது, அந்த வழியாக கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை ஒற்றை காட்டு யானை வழிமறித்தது. தொடர்ந்து, லாரியில் இருந்த கரும்பை தும்பிக்கையால் எடுத்து ருசித்தது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றதும் அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.
