கோவை,ஜூலை 27: கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே நேற்று நீட் தேர்வு ரத்து கோரி மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் 30 அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். நீட் தேர்வு ரத்து செய்யக்கோரியும், வினாத்தாள் கசிவை கண்டித்தும் நாடு முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல், நேற்று கோவை காந்திபுரத்தில் முற்போக்கு அமைப்புகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதற்கு தபெதிக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். புரட்சி கர இளைஞர் முன்னணி மலரவன், தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதை கழகம் நேருதாசு, தபெதிக சாஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது தபெதிக கு.ராமகிருஷ்ணன் கூறுகையில், ‘‘நீட் தேர்வு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகினால் மட்டும் போதாது, இந்த தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வால் உயிரிழந்த அனிதா முதல் அனுகீர்த்தனா வரையிலான குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும், ஒன்றிய அரசு நீட் தேர்வை ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும்’’ என்றார். இந்த போராட்டத்தில், திமுக ஸ்ரீநிதி, ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான், பொதுச்செயலாலர் ரவிக்குமார், திராவிடர் கழக மாவட்ட தலைவர் சந்திரசேகர், தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் சந்திரசேகர், எஸ்டிபிஐ முகமது இசாக்,
திராவிட தமிழர் கட்சி வெண்மணி, காங்கிரஸ் உமர் முர்தாப், தமிழ் சிறுத்தைகள் கட்சி அகத்தியன், சமூக விடுதலை கட்சி ஆறுமுகம், மக்கள் அதிகார கழகம் ராஜன், மே 17 இயக்கம் ஜீவா, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் பார்த்திபன், பொதுநல மாணவர் இயக்கம் வளர்மதி, வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு இயக்கம் காமராசு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி அசோகன், சமூக நீதி கட்சி பன்னீர் செல்வம், முற்போக்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட 30 அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்த போராட்டத்தையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
