காத்மண்டு: இந்தியாவின் ரூ.200, ரூ.500 நோட்டுகளை பயன்படுத்த நேபாள அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தின் பொருளாதாரம் சுற்றுலா வருவாயை நம்பியே உள்ளது. அந்நாட்டின் மிகப்பெரிய சுற்றுலா வருவாயாக இந்திய சுற்றுலா பயணிகள் இருந்து வருகின்றனர். அதனால் அங்கு இந்திய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனையில் ஈடுபடுவது நடைமுறையில் இருந்து வந்தது.
ஆனால், இந்தியாவில் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட பிறகு, நேபாளத்திலும் இந்தியாவின் அதிக மதிப்புடைய ரூ.200, ரூ.500 நோட்டுகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவின் ரூ.200, ரூ.500 நோட்டுகளை பயன்படுத்த நேபாளம் மீண்டும் அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து நேபாள ராஷ்ட்ரா வங்கி கடந்த வியாழக்கிழமை(23ம் தேதி) வௌியிட்ட அறிவிப்பில், “நடைமுறையில் உள்ள விதிகளின்படி, இந்திய மற்றும் நேபாள மக்கள் நவம்பர் 9, 2016 அல்லது அதற்கு பிறகு வௌியிடப்பட்ட ரூ.200, ரூ.500 நோட்டு இந்திய நோட்டுகளை ரூ.25,000 வரை எடுத்து செல்லலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* தேசிய அடையாள அட்டையை பயண ஆவணமாக ஏற்க கோரிக்கை
இதனிடையே நேபாளத்தின் குடியுரிமை சான்றிதழ், பாஸ்போர்ட் ஆகியவற்றுடன் தேசிய அடையாள அட்டையை இந்தியாவில் செல்லுபடியாகும் பயண ஆவணமாக ஏற்று கொள்ளுமாறு இந்தியாவிடம் நேபாளம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து நேபாள குடிவரவுத்துறையின் செய்தி தொடர்பாளர் டிகாராம் தகல் கூறுகையில், “இதுகுறித்த முன்மொழிவை ஏற்கனவே உள்துறை அமைச்சகம் மூலம் வௌியுறவு அமைச்சகத்துக்கு அனுப்பி உள்ளோம். அது இந்தியாவின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த இந்தியாவின் அதிகாரப்பூர்வ பதிலுக்காக காத்திருக்கிறோம். எங்கள் கோரிக்கைக்கு இந்தியா சாதகமான பதிலை அளிக்கும் என காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
