சென்னை: இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு செய்வதற்கான கால அவகாசம் 2 நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது, என தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள 13,999 இடங்களுக்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தின் மருத்துவ மாணவர் சேர்க்கை குழு நடத்துகிறது.
2026-27ம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த ஜூன் 29ம் தேதி தொடங்கி, ஜூலை 23ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டை பொறுத்தவரை மருத்துவ படிப்பில் சேர ஆன்லைன் மூலம், அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கும் சேர்த்து மொத்தமாக 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து இருப்பதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு விண்ணப்பங்கள் குறைந்துள்ளதாக செய்திகள் வெளியானது. மேலும், மாணவர்கள் தரப்பில் விண்ணப்பிப்பதற்கு இன்னமும் கால அவகாசம் வழங்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்ட படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்ப பதிவு மீண்டும் திறக்கப்படுகிறது என தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் தேர்வுக் குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் தேர்வுக் குழு, 2026-2027 கல்வி ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்புகளில் சேருவதற்கான இணையவழி விண்ணப்ப பதிவை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளது. இந்த வாய்ப்பு இதுவரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமேயானது. தங்கள் பதிவை முழுமையாக முடிக்காத விண்ணப்பதாரர்கள், தங்கள் இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இந்த நீட்டிக்கப்பட்ட காலத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இது மாணவர்களின் நலன் கருதி மேற்கொள்ளப்படும் ஒருமுறை மட்டுமேயான நடவடிக்கையாகும்; இனி கால நீட்டிப்பு வழங்கப்படாது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் அல்லது ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. இணையவழி விண்ணப்பப் பதிவு நாளை (26ம் தேதி) காலை 10 மணிக்குத் தொடங்கி, 27ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு முடிவடையும். ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில் எந்தச் சூழ்நிலையிலும் திருத்தம் செய்ய இயலாது என்பதைத் தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்.
இந்தக் கால நீட்டிப்பிற்கு முன்பே பெறப்பட்ட விண்ணப்பங்களைச் சரிபார்க்கும் பணி ஏற்கனவே நடைபெற்று வருகிறது. இச்சமயத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் மாற்றங்களையோ அல்லது திருத்தங்களையோ அனுமதிக்க நேரிட்டால், அது நடைபெற்று வரும் சரிபார்ப்புப் பணியைப் பெரிதும் பாதிப்பதோடு தாமதத்தையும் ஏற்படுத்தும். ஏற்கனவே விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த விண்ணப்பதாரர்கள், அதில் சிறு பிழைகள் இருந்தால் பதற்றமடையத் தேவையில்லை.
ஆவணச் சரிபார்ப்பு மற்றும் விண்ணப்ப ஆய்வு நிலைகளின்போது, எழுத்துப்பிழை அல்லது தட்டச்சுப் பிழை போன்ற சிறு பிழைகள் கருத்தில் கொள்ளப்பட்டு உரிய முறையில் சரிபார்க்கப்படும்.திருத்தப்பட்ட காலக்கெடுவிற்கு முன்னதாகவே விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதிகாரப்பூர்வ விண்ணப்ப இணையதளத்தை Inmedicalselection.org என்ற முகவரி மூலம் அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
