×

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாமிடம் என்பதா? அன்புமணி கண்டனம்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், வரும் 28ம் தேதி நடைபெறவுள்ள 33வது பட்டமளிப்பு விழாவில், முதலில் வந்தே மாதரம் தேசிய பாடலும், அடுத்து ஜன கண மன தேசிய கீதமும், 3வது தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும், என்று அந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது.

கடந்த மே 10ம் தேதி சென்னையில் நடைபெற்ற தமிழக அரசு பதவியேற்கும் விழாவில் முதலில் தேசிய பாடல், பின்னர் தேசிய கீதம், அடுத்து 3வதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வரிசை முறைக்கு தமிழ்நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை 9ம் தேதி பிறப்பித்த ஆணையில், மாநில பாடல்கள் பாடப்படும் விழாக்களில் அது தான் முதலில் பாடப்பட வேண்டும்;

அதன்பின் தேசியப் பாடல்; மூன்றாவதாக தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதையும் மீறி வந்தே மாதரம் என்ற தேசிய பாடலை தான் முதலில் பாட வேண்டும் என்று ஆளுனர் மாளிகை கட்டாயப்படுத்துவது அப்பட்டமான அதிகார வெளிப்பாடு. தமிழ் தாய் வாழ்த்தை எழுதியவரே மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை தான்.

அவரது பெயர் தான் நெல்லை பல்கலைக்கழகத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. அங்கும் கூட, ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்களையும் புறக்கணித்து விட்டு, வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும் என்று ஆளுனர் மாளிகை கட்டாயப்படுத்துவதும், அதை பல்கலைக்கழக துணை வேந்தர் அப்படியே ஏற்றுக் கொள்வதும் சரியல்ல. எனவே, பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Manonmaniam Sundaranar University ,Anbumani ,Chennai ,PMK ,Nellai ,
× RELATED 10 இடங்களில் நேற்று வெயில் சதம்...