×

ஜென் ஸி தலைமுறையை கவர இன்ஸ்டாவில் இணைந்து தினமும் ரீல்ஸ் போடுங்கள்: ஒன்றிய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி கட்டளை

புதுடெல்லி: டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தும் போராட்டம் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக ஜென் ஸி தலைமுறை எனப்படும் இன்றைய இளம் தலைமுறை பிரிவினர் நடத்தும் பெரும் போராட்டங்களை அரசு எதிர்கொண்டு வரும் நிலையில், பிரதமர் மோடி கூறுகையில்,’ இளைஞர்கள் பெருமளவில் இன்ஸ்டாகிராமில் உள்ளனர்.

நாம் அனைவரும் தொடர்பு கொள்ள வேண்டிய முக்கியமான குடிமக்கள் பிரிவு இது. கோடிக்கணக்கான இளைஞர்கள் தினமும் இத்தளத்தைப் பயன்படுத்துகிறார்கள். ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து மக்களுக்குத் தெரிவிப்பதுடன், அமைச்சர்கள் இத்தளத்தின் மூலம் தினமும் இளைஞர்களுடன் கலந்துரையாடல் அமர்வுகளையும் நடத்த வேண்டும்.

ஒவ்வொரு அமைச்சரும் ‘ரீல்ஸ்’ வீடியோக்களை உருவாக்க வேண்டும் மற்றும் கலந்துரையாடல் சார்ந்த உள்ளடக்கங்களை வெளியிட வேண்டும். வினாத்தாள் கசிவு என்பது சாதாரணமான விவகாரம் அல்ல என்பது எனக்குத் தெரியும். இது லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மிகுந்த வேதனையை அளிப்பதாகும். அதனால்தான் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’ என்றார்.

* அமைச்சர்களிடம் மோடி திடீர் கேள்வி
தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்கான அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்களை இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடி பதிவிட்ட சில மணிநேரங்களிலேயே அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி ஆலோசனை வழங்கினார். மேலும் உலகின் மிகவும் பிரபலமான சமூக ஊடகத் தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமைத் தனது அமைச்சரவையில் எத்தனை பேர் தீவிரமாகப் பயன்படுத்துகிறார்கள் என்று பிரதமர் மோடி அமைச்சரவைக் கூட்டத்தில் கேட்டறிந்தார். அவரது இந்த அறிவிப்புக்கு பிறகு, ஒரே நாளில் பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சம் அதிகரித்தது.

Tags : Instagram ,PM Modi ,Union ,New Delhi ,Karapanpoochchi Janata Party ,Delhi ,Union BJP government ,Modi ,
× RELATED மாணவர்கள் போராட்டத்தின் முக்கிய...