×

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி அமலாக்கத்துறை மனு: சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷணனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை தூத்துக்குடி நீதிமன்றத்திலிருந்து மதுரை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

கடந்த 2001-2006ம் ஆண்டுகளில் அமைச்சராக பதவிவகித்த போது வருமானத்துக்கு அதிகமாக 2 கோடியே 7 லட்சத்து 96 ஆயிரத்து 384 ரூபாய் சொத்து சேர்த்ததாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர்ந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கின் அடிப்படையில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்துள்ள அமலாக்கத் துறை, தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள வழக்கை மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜராத்தினம், மதுரை சிறப்பு நீதிமன்றம் அமலாக்கத் துறையின் புகாரை இன்னும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. தூத்துக்குடி நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை முடிந்து வழக்கறிஞர்களின் இறுதி வாதம் துவங்க உள்ளது. இந்த நிலையில் வழக்கை மதுரை நீதிமன்றத்துக்கு மாற்றுவது தவறான அணுகுமுறை என்று வாதிடப்பட்டது.

அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தார்த், மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணைக்கு எடுப்பது குறித்த நடைமுறை துவங்கியுள்ளது. ஆனால், அனிதா ராதாகிருஷணன் தரப்பில் அடுத்தடுத்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு நடைமுறை தடுக்கப்படுகிறது என்று வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அமலாக்கத் துறை மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

Tags : Enforcement Department ,Anitha Radhakrishnan ,Madurai ,Madras High Court ,Chennai ,Chennai High Court ,Thoothukudi court ,
× RELATED தூத்துக்குடி காவல் நிலையத்தில்...