சென்னை: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் வழங்கப்படும் பல்வேறு இளநிலை மீன்வள பட்டப்படிப்புகளுக்கான 2026-27ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கான தரவரிசைப் பட்டியலை பல்கலைக்கழக துணைவேந்தர் பெலிக்ஸ் நேற்று வெளியிட்டார். கடந்த 15.5.2026 முதல் 23.6.2026 வரை இதற்கான விண்ணப்ப பதிவு நடந்தது. தொடர்ந்து, விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில் நான்கு நாட்கள் சிறப்பு திருத்தச் சாளரமும் (Correction Window) திறந்து விடப்பட்டது.
மொத்தம் 15,585 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவர்களில் 59% (9,265) மாணவிகளும் மற்றும் 41% (6,320) மாணவர்கள். இதில், மீன்வள அறிவியல் படிப்பிற்கு 4,904 விண்ணப்பங்கள், மீன்வளப் பொறியியல் படிப்பிற்கு 1,813 விண்ணப்பங்கள், மீன்வள உயிர்தொழில்நுட்பம் படிப்பிற்கு 1,890 விண்ணப்பங்கள், உணவுத் தொழில்நுட்பம் படிப்பிற்கு 1,796 விண்ணப்பங்கள், இளநிலை வணிக நிர்வாகவியல் படிப்பிற்கு 1,370 விண்ணப்பங்கள் மற்றும் இளநிலை தொழிற்கல்வி (B.Voc.) படிப்புகளுக்கு 3,822 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
சிறப்புப் பிரிவில், 7.5% அரசு பள்ளி மாணவர்கள் இடஒதுக்கீட்டிற்கு 1,250 விண்ணப்பங்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான இடஒதுக்கீட்டிற்கு 30 விண்ணப்பங்கள், 5% மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீட்டிற்கு 23 விண்ணப்பங்கள், விளையாட்டு வீரர்கள் பிரிவிற்கு 116 விண்ணப்பங்கள், மீனவர் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான 5% மற்றும் 15% இடஒதுக்கீட்டிற்கு 366 விண்ணப்பங்கள் மற்றும் தொழிற்கல்விப் பிரிவு மாணவர்களுக்கான 5% இடஒதுக்கீட்டிற்கு 104 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் 10 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் ஒரு இணைப்பு தனியார் கல்லூரியில் மொத்தம் 447 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதில், மீன்வள அறிவியல் படிப்பிற்கு 187 இடங்கள், மீன்வளப் பொறியியல் படிப்பிற்கு 50 இடங்கள், மீன்வள உயிர்தொழில்நுட்பம் படிப்பிற்கு 43 இடங்கள், உணவுத் தொழில்நுட்பம் படிப்பிற்கு 42 இடங்கள், இளநிலை வணிக நிர்வாகவியல் (பிபிஏ) படிப்பிற்கு 21 இடங்கள் மற்றும் இளநிலை தொழிற்கல்வி (B.Voc.) படிப்புகளுக்கு 78 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மேலும், மீனவர் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்காக, மீன்வள அறிவியல் படிப்பில் 24 இடங்களும், மீன்வளப் பொறியியல் படிப்பில் 2 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. தரவரிசைப் பட்டியலில் அனிஷ்குமார், சேதுராஜன் மற்றும் பிரியவதனா ஆகிய மாணவர்கள் 200க்கு 199.50 தகுதி மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர். அவர்களை தொடர்ந்து அஷயா என்ற மாணவி 198.89 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தரவரிசைப் பட்டியல் மதிப்பெண்களில் பிழைகள் இருப்பின், விண்ணப்பதாரர்கள் குறைகளை 27.7.2026 மாலை 5 மணிக்குள், admissionug@tnfu.ac.in என்ற அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
