சென்னை: கர்நாடக முதல்வரை சந்தித்து பேசுவதற்கு வக்கில்லை, திராணி இல்லை. ஆனால் இன்றைக்கு அவ்வளவு அமைச்சரும் சினிமா தியேட்டரில் போய் படம் பார்க்கிறார்கள் என்று நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி: ஒரு வருத்தமான செய்தி. ஜனநாயகன் என்ற படத்துக்கு ஜனநாயகமே இல்லாமல் எல்லா மந்திரிகளும் தியேட்டரில் போய் உட்கார்ந்து இருக்காங்க. ஒருத்தர் தேம்பி, தேம்பி அழுகிறார். விஜய் இனிமேல் நடிக்க மாட்டாராம். அதனால் தேம்பி தேம்பி அழுதாராம்.
சபாநாயகர் ஜேசிடி.பிரபாகர், உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்திற்கு பிறகு நான் பார்த்த முதல் படம் ஜனநாயகன் என்கிறார். இது ரொம்ப முக்கியம். ரொம்ப அவசரம். இன்றைக்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை லீவாய்யா. ஓர்கிங் டே. 5ம் தேதி பட்ஜெட். நீங்கள் எங்க இருக்கீங்க. சினிமா தியேட்டரில் போய் இருக்கீங்க. கேட்டால் உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு அப்புறம், நாங்கள் படம் பார்க்கிறோம் என்று சொல்கிறார்.
நான் முதல்வரை பார்த்து கேட்கிறேன். பக்கத்தில் கர்நாடகா யார் அரசாங்கம். காங்கிரஸ் கட்சியின் அரசாங்கம். நீங்கள் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி மந்திரி சபையில் இருக்கீங்க. இன்றைக்கு மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கவில்லை. ஜூன் மாதம் திறக்க வேண்டிய தண்ணீர் வரவில்லை. ஆனால், இன்றைக்கு அவர்கள் நீட் தேர்வை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
முதல்வர் விஜய்க்கு, கர்நாடக முதல்வரை சந்தித்து பேசுவதற்கு வக்கில்லை, திராணி இல்லை. ஆனால், இன்றைக்கு அவ்வளவு அமைச்சர்களும் சினிமா தியேட்டரில் போய் படம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றால், ஓட்டு போட்ட பெரியவர்களை பார்த்து தான் நான் கேட்க வேண்டும். யாரிடம் போய் இதை சொல்ல முடியும். நாடு எவ்வளவு மோசமான நிலையில் போய் கொண்டு இருக்கிறது. வருகிற 1ம் தேதி பாஜ சார்பில் தஞ்சாவூரில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
* சென்னையில் பாஜ ஆர்ப்பாட்டம்
டெல்லியில் இளைஞர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் மற்றும் ராகுல் காந்தியை கண்டித்து தமிழக காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம் என்று பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்து இருந்தார். அதன்படி நேற்று காலை சென்னை அண்ணா சாலையில் உள்ள தாராப்பூர் டவர் அருகில் பாஜ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, டால்பின் ஸ்ரீதர், மாநில செயலாளர்கள் வினோஜ் பி.செல்வம், கராத்தே தியாகராஜன், எஸ்.சதீஷ்குமார், ஜான் பீட்டர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பாஜவினர் அங்கிருந்து காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்து இருந்தனர். அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுதொடர்பாக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘அரசியலில் பீல்டு அவுட் ஆன காங்கிரஸ் போன்ற கட்சிகள், மாணவர்கள் போராட்டத்தை கலவரமாக மாற்ற நினைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மாணவர்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவுவதை ஆதரிக்கும் காங்கிரசின் வெறுப்பு அரசியலை ஊக்குவிப்பது பேராபத்தானது’’ என கூறியுள்ளார்.
