சென்னை: காவிரி நீரைப் பெறவும்-மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை பிரதமரிடம் நேரில் கொடுக்கவும் ஏன் பயம் என்று முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் விவசாயிகளுக்கு புதிய நிவாரண தொகுப்பு அறிவித்திடவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய 28.3 டி.எம்.சி காவிரி நீரில் இதுவரை 3.4 டி.எம்.சி மட்டுமே திறந்து விட்டுள்ளதால் மேட்டூர் அணையை ஜூன் 12ம் தேதியும் திறக்க இயலவில்லை.
ஜூன் 23 அன்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், “அணைகளில் உள்ள நீரை குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன்படுத்துங்கள்” என்று ஆணையம் அறிவுறுத்தி, தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறப்பது குறித்த முடிவை ஜூலை 22ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இப்போது ஜூலை 22ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்திலும், “குடிநீர் தேவைக்கு மட்டுமே நீரைப் பயன்படுத்துங்கள்” என அறிவுறுத்தி, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பது பற்றிய முடிவினை ஜூலை 28ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
இரு கூட்டங்களிலும் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் மீண்டும் மீண்டும் நிராகரித்து-காலதாமதம் செய்து கொண்டிருக்கிறது. ஒரு கூட்டம், இரு கூட்டம் என்று இப்போது மீண்டும் 28.7.2026 அன்று மூன்றாவது கூட்டம் என்ற நிலையிலேயே காவிரி மேலா ண்மை ஆணையம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் கோரிக்கையில் உள்ள அவசர நியாயத்தை ஆணையம் உணர மறுப்பது தெளிவாகிறது.
“தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை கர்நாடகம் தர மறுப்பது நீதிமன்ற அவமதிப்பு” என உச்ச நீதிமன்றம் 23.11.2025 தீர்ப்பிலேயே தெளிவாக சுட்டிக்காட்டியுள்ள நிலையில், காவிரி மேலா ண்மை ஆணையம் காலதாமதம் செய்து கொண்டிருப்பது காவிரி டெல்டா விவசாயிகளின் வேதனைக் கண்ணீருக்கு தீர்வாகாது. நெருக்கடியான இச்சூழ்நிலையில், முதல்வர் இந்நேரம் பிரதமரை சந்தித்திருக்க வேண்டும். ஆனால் முதல்வரும் பேசவில்லை. நீர்வளத்துறை அமைச்சரும் பேசவில்லை.
தலைமைச் செயலாளரும் கர்நாடக மாநில தலைமைச் செயலாளருக்கோ அல்லது ஒன்றிய அரசின் செயலாளருக்கோ கடிதம் எழுதியிருப்பதாக தெரியவில்லை. ஒட்டுமொத்த காவிரி டெல்டாவின் உயிர்நாடி பிரச்னையில் இந்த அரசு காக்கும் அர்த்தமற்ற மவுனம் அதிர்ச்சியளிக்கிறது. அணை கட்டுவதை எதிர்க்கவும் நடுவர் மன்றம் அமைக்க சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியும், அந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளையும் அழைத்துக் கொண்டு பிரதமரிடம் நேரில் கொடுக்கவும் நேரமில்லாமல் இருக்கிறார் முதல்வர்.
இப்போது தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசையும் தட்டிக் கேட்க முடியாமல் தவிக்கிறார். விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னையை விட வேறு என்ன பிரச்னையில் இந்த அரசு கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது? மாநிலத்தின் காவிரி உரிமையை நிலைநாட்ட ஏன் இவ்வளவு பயம்? முதல்வர் உடனடியாக தனது மவுனத்தை கலைத்து, கர்நாடகாவிலிருந்து காவிரி நீரைப் பெறப் போர்க்கால நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
எல்லா அதிகாரமும் பெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தை தட்டி எழுப்ப உச்ச நீதிமன்றத்தை உடனடியாக அணுகி, தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரைப் பெறுவதற்கு விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறுவை சாகுபடி பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் காவிரி டெல்டா விவசாயிகள், சம்பா சாகுபடியும் கானல் நீராகுமோ என கவலையில் உறைந்து போயிருக்கிறார்கள்.
காவிரி நீரைப் பெற தீவிர நடவடிக்கை மேற்கொள்ளும் அதேவேளையில், விவசாயிகளுக்கு உடனடியாக புதிய நிவாரண தொகுப்பினையும் அறிவித்து, விவசாயப் பெருங்குடி மக்களை இப்பேரிடரிலிருந்து காப்பாற்றிட முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
