×

தூத்துக்குடி காவல் நிலையத்தில் வாலிபர் அடித்துக்கொலை: போலீசார் தலையில் தாக்கியதாக மரண வாக்குமூலம்: நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியல்

தூத்துக்குடி: தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனையில் அந்த வாலிபர் சிகிச்சையில் இருந்தபோது அளித்த மரண வாக்கு மூலம் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது மரணத்துக்கு நீதி கேட்டு உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்தவர்கள் நாகராஜ்-பரமேஸ்வரி.

இவர்களது மகன் அருணாசலம் (26). இவர், தூத்துக்குடி பைபாஸ் ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை செய்து வந்தார். கடந்த 17ம் தேதி தென்பாகம் எஸ்ஐ சரண்யா மற்றும் போலீசார், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக அருணாசலத்தை பிடித்து வந்து தென்பாகம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர், காவல் நிலையத்தில் உள்ள லாக் அப் அறையில் சக கைதிகளுடன் அருணாசலத்தை அடைத்தனர்.

அப்போது அருணாசலம் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து போலீசார், அவரது தாய் பரமேஸ்வரியை வரவழைத்து அருணாசலத்தை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அவசர, அவசரமாக அருணாசலம் மீது 120 மதுபாட்டில்களை திரு.வி.க.நகர் அடுத்துள்ள பார் அருகே பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், அவரை காவல்நிலைய ஜாமீனில் விடுவித்ததாக உயர் அதிகாரிகளுக்கு தகவலும் தெரிவித்தனர்.

இந்நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருணாசலத்தை அவரது நண்பர்கள் பார்க்க சென்றனர். அப்போது, அருணாசலம் தனது நண்பர்களிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘‘தன்னை பைபாஸ் பகுதியில் உள்ள கடையருகே வைத்து சுமார் 3 மணி நேரம் போலீசார் கடுமையாக தாக்கினர். இதில் தலையில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகே மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததாக தென்பாகம் போலீசில் ஒப்படைத்துச் சென்றுவிட்டனர்’’ என்று தெரிவித்தனர். இந்த சூழலில் பலனின்றி நேற்று அதிகாலை அருணாசலம் உயிரிழந்தார்.

இதுபற்றி பெற்றோருக்கு தகவல் தெரிவிக்காமல் சித்தப்பாவிடம் கையெழுத்து பெற்று பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பியுள்ளனர். சிறிது நேரத்தில் பெற்றோர், உறவினர்கள் தகவல் கிடைத்து அரசு மருத்துவமனைக்கு திரண்டனர். போலீசார் தாக்கியதால் அருணாசலம் உயிரிழந்துள்ளார். எனவே, சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி தாய் பரமேஸ்வரி, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் வாலிபர் சாவுக்கு நீதி விசாரணை கோரி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து இப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். தகவலறிந்த முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தலைமையிலான திமுகவினரும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் அங்கு வந்தனர். அவர்கள், அருணாசலத்தின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் அரசு மருத்துவமனை எதிரே, பாளை. ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கும் வரையில் மறியலை கைவிடப்படுவதில்லை என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. இதனிடையே அருணாசலத்தின் உடல், அரசு மருத்துவக்கல்லூரி பிரேத பரிசோதனை அறையில் இருந்து மீண்டும் பாதுகாப்பாக அரசு மருத்துவமனை பிணவறைக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து மறியலை கைவிட்டவர்கள், அரசு மருத்துவமனையில் திரண்டனர்.

பின்னர் அருணாசலத்தின் குடும்பத்தினர், கலெக்டர் மற்றும் எஸ்பி அலுவலகங்களுக்கு சென்று போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனுக்களை அளித்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், ‘‘அருணாசலம் மீது எந்த வழக்குகளும் இதற்கு முன்னர் கிடையாது. அவரை சம்பவத்தன்று காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார் இரவு வரை அடைத்து வைத்து தாக்கியுள்ளனர். அதன் பின்னர் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது அருணாசலம் தான் தாக்கப்பட்டது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

26 வயதில் அவர் தன்னிச்சையாக இறந்தார் என்பது யாராலும் ஏற்க முடியாது. அவரது மரணம் போலீசார் தாக்கியதால் தான் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பாக மாஜிஸ்திரேட் அல்லது டிஆர்ஓ விசாரணை நடத்த வேண்டும். விசாரணை தொடர்பாகவும், பிரேத பரிேசாதனை தொடர்பாகவும் முழு வீடியோ பதிவு செய்ய வேண்டும். கடந்த 18ம் தேதி தென்பாகம் காவல் நிலையத்திற்கு அவர் அழைத்து செல்லப்பட்டது முதல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது வரையிலான வீடியோவை காவல் துறை பகிரங்கமாக வெளியிட வேண்டும்’’ என்றனர்.

* சிசிடிவி காட்சி பதிவுகளை அதிகாலையில் கைப்பற்றி சென்ற போலீசார்
கடந்த 17ம் தேதி தென்பாகம் காவல் நிலையத்தில் அருணாசலத்தை போலீசார் உடல் முழுவதும் சோதனை செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. பின்னர், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரது தலை மொட்டை அடிக்கப்பட்டு கட்டு போடப்பட்டிருந்தது.

இதனால் அருணாசலம் உயிரிழப்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது. இந்நிலையில், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் மற்றும் அங்குள்ள சிசிடிவி கண்ட்ரோல் ரூம் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை, நேற்று அதிகாலையிலேயே எஸ்பி அலுவலக உத்தரவின் பேரில் வந்த போலீஸ் குழுவினர் அவசர அவசரமாக கைப்பற்றி சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* மொட்டை அடிக்கப்பட்டது ஏன்?
அருணாசலத்தை 17ம் தேதி போலீசார் காவல் நிலையத்தில் விசாரிக்கும்போது அவர் நல்ல நிலையில் இருந்துள்ளார். அதன்பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவருக்கு தலையில் காயத்துடன், மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த இரண்டு காட்சிகளும் சமூக வலைதளங்களில் வீடியோவாக பரவி வருகிறது.

இதனால் நல்ல நிலையில் இருந்த அருணாசலத்துக்கு, போலீசாரின் விசாரணைக்குப்பின் மொட்டை அடிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்து உள்ளது. ஆனால், போலீசார் தாக்கியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கட்டியதால், ஸ்கேன் எடுப்பதற்காக அருணாசலத்துக்கு மொட்டை அடிக்கப்பட்டு, கட்டு போடப்பட்டதாக அவரது தாயார் தெரிவித்தார்.

* வலிப்பு வந்து மயங்கினார்: காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி மாவட்ட போலீசார் வெளியிட்ட அறிக்கை: கடந்த 17ம் தேதி தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த அருணாசலம் 120 மதுபாட்டில்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறி, தூத்துக்குடி தெற்கு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் லாக்-அப்பில் பிற கைதிகளுடன் வைக்கப்பட்ட பின் திடீரென மயங்கி கீழே விழுந்தார். போலீசார் அவருக்கு முதலுதவி செய்து குடிநீர் வழங்கினர்.

பின்னர் உறவினர்களுடன் தொடர் மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் மருத்துவமனை அருகே சென்றபோது அவர் மீண்டும் மயங்கி விழுந்ததாக உறவினர்கள் தெரிவித்த நிலையில், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு நேற்று உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அருணாசலத்தை போலீசார் யாரும் தாக்கவில்லை. அவர் வலிப்பு வந்து மயங்கி விழுந்ததால் போலீசாரால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஆபரேசன் நடந்துள்ளது. அந்த சிகிச்சையை தாங்க முடியாத நிலையில் அவர் இறந்திருக்கலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஆனால், மயங்கி விழுந்தவருக்கு ஏன் தலையில் முடியை எல்லாம் மொட்டை அடித்துவிட்டு ஆபரேசன் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு இதுவரை போலீசார் யாரும் பதில் அளிக்கவில்லை.

* ‘பிட்னெஸ்’ சர்டிபிகேட் வழங்க மறுத்த டாக்டர்கள்
போலீசார் ஒருவரை கைது செய்தால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உடல் தகுதி குறித்து சான்றிதழ் வாங்க மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்வார்கள். அதன்படி, அருணாசலத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டி மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் கொண்டு சென்றுள்ளனர்.

அப்போதே அவரது தலையில் காயங்கள் இருந்துள்ளன என்றும், பிட்னெஸ் சர்பிகேட் தர முடியாது என்றும் மருத்துவர்கள் மறுத்துள்ளனர். அதன் பிறகே அருணாசலத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியாமல் தென்பாகம் போலீசார், காவல் நிலைய ஜாமீனில் விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

* போலீஸ்காரங்க கொன்னுட்டாங்க தாய் கதறல்
அருணாசலத்தின் தாய் பரமேஸ்வரி கூறுகையில், ‘‘போலீசார் விசாரணை என்ற பெயரில் எனது மகனை கடந்த 17ம் தேதி அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மயக்கமடைந்து விட்டதாக எனக்கு தகவல் தெரிவித்தனர். நான் அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன். சிகிச்சை பெற்று வந்த எனது மகன் நேற்று உயிரிழந்து விட்டான்.

போலீசார் தாக்கியதில் தான் எனது மகன் உயிரிழந்துள்ளான். எனது மகன் சாவுக்கு காரணமாக இருந்த, அவனை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு நீதி வேண்டும். அதுவரை அவனது உடலை வாங்க மாட்டோம்’’ என கண்ணீர் மல்க கூறினார்.

* மாஜிஸ்திரேட் விசாரணை
போலீசார் தாக்கியதில் தனது மகன் உயிரிழந்ததாக அருணாசலத்தின் பெற்றோர் அளித்த புகார் மனுக்கள் அடிப்படையில் தூத்துக்குடி 3வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் விஜயராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்து அருணாசலம் உடலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடலில் இருந்த காயங்களை பார்வையிட்டு குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து உடல், எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. அப்போது, பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது.

* 3 மணி நேரம் தாக்குதல் எல்லை மாறி போலீசார் வந்தது ஏன்?
தூத்துக்குடி பைபாஸ் சாலை அருகே தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டாஸ்மாக் பார் உள்ளது. இதனருகே இருந்த அருணாசலத்தை, தாளமுத்துநகர் போலீசார் 3 பேர் பிடித்துள்ளனர். அங்கு வைத்தே அவரை கடுமையாக தாக்கி உள்ளனர். தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் உத்தரவின்பேரில் காலை 6.30 மணிக்கு சென்ற எஸ்ஐ, ஏட்டு, காவலர் ஆகிய 3 போலீசார் அருணாசலத்தை பிடித்து 9.30 மணி வரையில் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அதன் பின்னர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வருவதாக கூறி தென்பாகம் போலீசில் ஒப்படைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த போலீசார் யார்? அவர்கள் எதற்காக தங்களது எல்லை மீறி தென்பாகம் எல்லைக்குள் வந்து அருணாசலத்தை பிடித்து தாக்கினர்? என்று போலீசாரே கேள்வி எழுப்பி உள்ளனர்.

* தவெக ஆட்சியில் இதுவரை நடந்த லாக் அப் சாவு
தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நாகர்கோவிலில் மாற்றுத் திறனாளி வியாபாரி சபரிவர்மன் கடையில் தடை செய்யப்பட்ட 14 புகையிலை பாக்கெட் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடித்து கொலை செய்யப்பட்டார்.

இதேபோல புழல் சிறையில் குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டவரும் அடித்து கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். தற்போது நெல்லையில் வாலிபர் அருணாசலம், மதுபாட்டில்கள் பதுக்கி விற்றதாக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். தவெக ஆட்சிக்கு வந்தபிறகு மொத்தம் 5 லாக்அப் சாவு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.

Tags : Thoothukudi police station ,Thoothukudi ,Thoothukudi South Police Station ,
× RELATED அனிதா வீட்டுக்கு மறைமுகமாக...