நன்றி குங்குமம் டாக்டர்
கவனம் ப்ளீஸ்!
நாடெங்கிலும் வெப்ப அலை அடித்து வரும் இந்தச் சூழ்நிலையில், வீடுகளிலும், அலுவலகங்களிலும் குளிரூட்டிகளைப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நாம் அனைவரும் குளிரூட்டிகளை எவ்வாறு நமது ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பான முறையில் உபயோகிப்பது என்பதை அறிந்து வைத்திருப்பது காலத்தின் கட்டாயமாகிறது.
ஸ்ப்லிட் ஏசி செயல்படும் முறையில் ஒரு அறைக்குள் நாம் விடும் மூச்சுக் காற்று மீண்டும் மீண்டும் மறு சுழற்சி செய்யப்பட்டு அந்த அறைக்குள்ளேயே தான் சுற்றிக்கொண்டு இருக்கிறது. இப்போது நான்கு புறங்களிலும் காற்று புகாத வண்ணம் அடைக்கப்பட்ட 12 × 12 பெட்ரூமைக் கற்பனை செய்து கொள்ளவும். ஸ்ப்லிட் ஏசி போடப்பட்ட அந்த அறையில் இருவர் உறங்கச் செல்கிறார்கள்.
அவர்கள் சுவாசிக்கும் போது, ஆக்சிஜனை (உயிர்வளி) உள்ளிழுத்து கார்பன் டை ஆக்சைடை (கரியமில வாயு) வெளியேற்றுவார்கள். காற்று புகா வண்ணம் ஏசி ரூம் அடைக்கப்பட்டிருப்பதால், அந்த அறைக்குள் அவர்கள் சுவாசித்து வெளியேற்றும் கார்பன் டை ஆக்சைடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும். ஆக்சிஜன் அளவுகள் குறைந்துகொண்டே வரும். ஒரு வளர்ந்த மனிதன் ஒரு மணிநேரத்திற்கு 10 முதல் 15 லிட்டர் கார்பன் டை ஆக்சைடை மூச்சுக் காற்றின் மூலம் வெளியேற்றுகிறார். இதன் வழி, கார்பன் டை ஆக்சைடு 750 பிபிஎம் என்ற அளவுக்குள் இருப்பது ஆரோக்கியமானது.
அதுவே, 800-1000 பிபிஎம் என்ற அளவுகளை அடைந்தால், உறக்கம் பாதிக்கும். திடீரென அடிக்கடி விழிப்பு ஏற்படும். அடுத்த நாள், தலைவலி, சிந்தனை செய்யும் திறன் குறைபாடு, பகல் நேரத் தூக்கம் வருதல், சோர்வு போன்ற பிரச்னைகள் வரும். இரண்டு பேர் உறங்கும் போது அடுத்த நாள் காலை நேரத்தில் கார்பன் டை ஆக்சைடு அளவுகள், 750-1200 பிபிஎம் என்ற அளவில் இருக்கும்.
இது மனிதர்களால் ஓரளவு சகித்துக் கொள்ளக் கூடிய நிலை என்றாலும் அதே அறையில் இன்னும் ஒருவரோ இருவரோ சேர்ந்து நான்கு பேர் உறங்கினால் அதிகாலை 3 மணி அளவிலேயே கார்பன் டை ஆக்சைடு அளவுகள், 2400-4500 பிபிஎம் என்ற அபாயகரமான அளவுகளை எட்டும். இது சிறார் சிறுமியர் , முதியோருக்கு பாதிப்பை அதிகரிக்கச் செய்யும். மூச்சுத்திணறல் நிலையைக் கூட ஏற்படுத்தலாம். எனவே, ஒரு ஏசி படுக்கையறையில் இருவர் துயில் கொள்வது பாதுகாப்பான அளவு.
அதை விட அதிகமான நபர்கள் உறங்கும் நிலை வந்தால் பின்வரும் வழிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம்.
1. அறையின் கதவுகளை 3 முதல் 4 இஞ்ச் வரை திறந்து வைக்கலாம். இதன் வழியாக வெளியே இருந்து தூய காற்று அறைக்குள் வரும். அறைக்குள் இருந்து கார்பன் டை ஆக்சைடு நிரம்பிய காற்று வெளியேறும் வாய்ப்பும் உருவாகும். 2. அறைக்குள் இருக்கும் ஜன்னல் ஒன்றை, அரை இஞ்ச் அளவு திறந்து வைத்தாலே வெளிக்காற்று உள்ளே வரவும். உள்ளே உள்ள காற்று வெளியேறவும் வாய்ப்பாக அமையும்.
3. உறங்க இருக்கும் அறையை, உறங்கச் செல்வதற்கு ஒரு மணிநேரம் முன்பே 24 டிகிரி செல்சியஸுக்கு செட் செய்து ஓட விட்டால் அந்த அறையில் உள்ள சுவர்கள், தரை உள்ளிட்டவை குளிர்ச்சி அடைந்து விடும். பிறகு படுக்கும் போது ஏசியை ஆஃப் செய்து விட்டு மின் விசிறி போட்டுக் கொண்டு அறையைத் திறந்து வைத்து பலரும் பாதுகாப்பாகத் தூங்கலாம்.
ஏசி அறைகளில் உறங்கும் போது சிலருக்கு தொண்டை வறட்சி , நாசி வறட்சி, தொண்டை வலி ஏற்படுவதாகக் கூறுவார்கள்.
இதற்குக் காரணம் – ஏசியில் இருந்து வருவது வறட்சியான காற்று. அத்தகைய வறண்ட காற்றைத் தொடர்ந்து உள்ளிழுக்கும்போது சிலருக்கு சுவாசப் பாதை வறட்சி உருவாகலாம். இதை சரிசெய்வதற்கு ஏசி வெப்பத்தை – 24 முதல் 26 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் பயன்படுத்தலாம். அதீத குளிர்ச்சி – அதீத வறட்சியை ஏற்படுத்தும். அறைக்குள் காற்று ஈரப்பதமூட்டிகள் (HUMIDIFIERS) உபயோகிக்கலாம். ஒரு வாளியில் தண்ணீர் நிரப்பி அறைக்குள் வைத்தாலும் வறண்ட காற்றில் ஈரப்பதம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வறண்ட காற்றின் விளைவாக தோல் வறட்சி ஏற்படும் நிலை வந்தால், தோல் ஈரப்பதமூட்டிகள்(MOISTURISERS) தடவிக் கொள்ள வேண்டும்.
சரியான அளவு நீர்ச்சத்தை உடலில் பராமரிக்க வேண்டும். ஏசி அறைக்குள்ளும் நீரிழப்பு ஏற்படும். எனவே சரியான அளவு நீர் அருந்துதலில் அக்கறை காட்ட வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் நீர் அருந்துவதை உறுதி செய்ய வேண்டும். ஏசியில் இருந்து குளிர்ந்த காற்று வெளிப்படும் இடத்திற்கு நேராக நமது தலை வைத்துப் படுக்கக்கூடாது. குளிர்ச்சியான காற்று தொடர்ந்து உள்ளே செல்லும் போது சைனஸ் (முகத்தில் உள்ள காற்றறைகள்) அடைத்துக் கொண்டு தலைவலி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதேபோன்று, குளிர்ச்சியான காற்று உடலில் நேரடியாக படும்போது, தசை இறுக்கம் ஏற்படும். எனவே, நல்ல போர்வை கொண்டு கால்களை போர்த்திக்கொள்ள வேண்டும்.
அலர்ஜி/ ஆஸ்துமா உள்ளிட்ட ஒவ்வாமை பிரச்னைகள் இருப்பவர்கள் குளிர்ச்சியான காற்று நேரடியாக முகத்தில் வீசுவதை தவிர்க்க வேண்டும். 24 டிகிரி செல்சியஸ் எனும் அளவில் பயன்படுத்தினால் சரியாக இருக்கும்.அதற்கும் கீழ் அறையின் வெப்பத்தைக் குறைக்கும் போது குளிர்ச்சியான காற்று சுவாசப்பாதைக்குள் சென்று ஆஸ்துமா வீரியத்தை அதிகரிக்கலாம். ஏசியின் ஃபில்டர் பகுதியில் சேர்ந்துள்ள தூசியை மாதம் ஒருமுறை கட்டாயம் துடைத்து தூய்மையாகப் பேண வேண்டும்.
அசுத்தமான ஃபில்டர் வழியாக அசுத்தமான காற்று அறைக்குள் நிலவி பல சுவாசப்பாதை நோய்களை உருவாக்கலாம். வெளிப்புறம் நிலவும் வெப்பத்தை விட 11 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் கீழ் ஏசியை செட் செய்யக்கூடாது. அதாவது இரவு நேர வெளிப்புற வெப்பம், 30 டிகிரி செல்சியஸ் என்றால் நமது ஏசியின் வெப்பம் 19 டிகிரி செல்சியஸுக்குக் கீழ் செல்லாமல் இருக்க வேண்டும்.
இது ரத்த அழுத்தம் சார்ந்த மாறுபாடுகளும், சைனஸ் நலனையும் பேணுவதற்கு முக்கியமான விசயமாக இருக்கிறது. ஏசி அறையில் மின்விசிறி ஓட்டும்போது, அந்த அறையின் வெப்பத்தை 24-26 டிகிரி என்று செட் செய்தாலும் 22 டிகிரி போன்ற தன்மை ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. கூடவே ஏசியுடன் மின்விசிறி பயன்படுத்தும் போது மின்சார செலவினமும் குறைகிறது. குளிரூட்டிகள் மூலம் வெப்ப காலங்களிலும் சிறந்த உறக்கம் கிடைக்கிறது. குளிர்ச்சியான சூழ்நிலையில் , விரைவில் உறக்கம் ஏற்படுவதாகவும், நீடித்த ஆழ்ந்த உறக்கம் கிடைப்பதாகவும் அறிவியல் ஆய்வுகள் சான்று பகர்கின்றன.
தொகுப்பு: பொது நல மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா
