×

மாணவர்கள் போராட்டத்தை மதிக்காமல் அலட்சியப்படுத்தும் ஒன்றிய அரசு – திமுக எம்.பி திருச்சி சிவா விமர்சனம்

டெல்லி: டெல்லியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மாணவர்களின் போராட்டத்தை ஒன்றிய அரசு எவ்வகையிலும் மதிக்கவோ அல்லது அங்கீகரிக்கவோ இல்லை என திமுக எம்.பி திருச்சி சிவா குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டம் கூட 20 நாட்களுக்கும் மேலாக தொடர அனுமதிக்கப்பட்டது. ஆனால் 2 நாட்கள் கூட போராடாத மாணவர்கள் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனர். ஒன்றிய அரசுக்கு மனிதாபிமான அணுகுமுறை இல்லை.

தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும் கூட மாணவர்கள் தங்களின் உரிமைக்காக மனம் தளராமல் போராடி வருகின்றனர். நீட் தேர்வினை பொறுத்தவரை நாட்டிலேயே அதற்கு எதிராக முதலில் குரல் எழுப்பியதே தமிழ்நாடும், திமுக-வும் தான். தேசிய அளவில் தேர்வு முறைகேடுகள் மற்றும் நீட் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கு எதிராக மாணவர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இவ்விகாரம் தற்போது தலைநகரில் எதிரொலித்து உள்ளது.

குறிப்பாக நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் நாடு முழுவதும் பரவியுள்ள நிலையில், ஒன்றிய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் எனவும் திருச்சி சிவா வலியுறுத்தி உள்ளார்.

இதனிடையே நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. உஜ்வல் ராமன் சிங் “நாங்கள் நேற்று மாணவர்களுடன் நின்றோம், இன்றும் அவர்களுடன் நிற்கிறோம், நாளையும் அவர்களுடன் தொடர்ந்து நிற்போம். அரசு முரண்பாடான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது; நாடாளுமன்றத்தில் விவாதத்தை அனுமதிக்காத அதே வேளையில், வெளியே நீட் வினாத்தாள் கசிவு குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள். மக்களின் குரலுக்குச் செவிசாய்க்கும் போது மட்டுமே ஜனநாயகம் செயல்படும்,” என்று தெரிவித்தார்.

Tags : Union Government ,Dimuka M. ,Delhi ,Dimuka M ,P Trichy Shiva ,Parliament ,
× RELATED போலீஸ் தடியடி, கண்ணீர் புகை குண்டு...