×

கல்வியாளருக்குப் பேரண்டமே பிரார்த்திக்கிறது..!

கல்விக்கும் அறிவைத் தேடுவதற்கும் இஸ்லாமிய வாழ்வியல் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. திருக்குர்ஆன் வேதத்தின் முதல் வார்த்தையே “ஓதுவீராக” என்றுதான் அருளப்பட்டது. “இறைவனின் படைப்புகளைச் சிந்தித்துப் பாருங்கள்” என்று ஏராளமான திருவசனங்கள் குர்ஆனில் உள்ளன.
“ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்” என்றுதானே நமது ஔவைப் பாட்டியும் வலியுறுத்தினார்.
கல்வியின் சிறப்பையும் கல்வியாளர்களின் மேன்மையையும் குறித்து இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) மிக உயர்வாகக் குறிப்பிட்டுள்ளார்.
நபிகளார் ஒரு முறை கூறினார்:
“யார் ஒரு பாதையில் கல்வியைத் தேடிச் செல்கிறார்களோ அவருக்கு சொர்க்கத்தின் பாதையை இறைவன் எளிதாக்குகிறான்.”
“கல்வியைத் தேடும் ஒருவர்மீது கொண்டுள்ள உவப்பால் வானவர்கள் தம் சிறகுகளைத் தாழ்த்துகிறார்கள்.”
“தண்ணீரில் வாழும் மீன்கள் உட்பட வானம்-பூமியிலுள்ள யாவரும் கல்வியைத் தேடுபவருக்காகப் பாவமன்னிப்புக் கோருகின்றனர்.”
இவையெல்லாம் கல்வியின், கல்வியாளரின் சிறப்பு குறித்து நபிகளார்(ஸல்) மொழிந்த சில பொன் மொழிகள்.
மிகப்பெரிய பக்தியாளர் – வணக்கசாலி சிறந்தவரா? கல்வியாளர் சிறந்தவரா?
இந்தக் கேள்விக்கு இறைத்தூதர் அவர்கள் அழகாகப் பதில் சொல்லியுள்ளார். “வணக்கசாலி ஒருவரைவிட கல்வியாளர் ஒருவருக்குள்ள சிறப்பு, (வானிலுள்ள) மற்ற உடுக்களை (நட்சத்திரங்களை) விட சந்திரனுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும்.”
அது மட்டுமல்ல, “சிறந்த கல்வியாளருக்காக, மக்களுக்கு நல்லதைக் கற்பிப்பவருக்காக இந்த அகிலமே ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறது” என்றும் அண்ணல் நபிகளார் கூறியுள்ளார்.
இறைத்தூதரிடம் இரண்டு மனிதர்களைப் பற்றிப் பேசப்பட்டது. அவர்களில் ஒருவர் கல்வியாளர், மற்றவர் வணக்கசாலி. அப்போது இறைவனின் தூதர், “ஒரு வணக்கசாலியைவிட கல்வியாளருக்குள்ள சிறப்பு உங்களில் கடைநிலையில் உள்ள ஒருவரைவிட (இறைத்தூதராகிய) எனக்குள்ள சிறப்புப் போன்றதாகும்” என்றார்.
நபிகளார் (ஸல்) மேலும் கூறினார்: “இறைவனும் அவனுடைய வானவர்களும், விண்ணிலும் மண்ணிலும் வசிப்போரும், புற்றுகளில் வாழும் எறும்புகள், தண்ணீரில் வாழும் மீன்கள் உட்பட யாவுமே மக்களுக்கு நல்லதைக் கற்பிப்பவருக்காக அருள்வேண்டிப் பிரார்த்திக்கின்றனர்.”
மக்களுக்கு நல்லதைக் கற்பித்து, அறிவுக்கண் திறக்கவைத்து, நேர்வழியைக் காட்டும் கல்வியாளருக்காகப் பேரண்டமே பிரார்த்திக்கிறது எனில், கல்வியின் – கல்வியாளரின் சிறப்பை இதைவிட எப்படி உயர்வாகச் சொல்ல முடியும்?
நம் அனைவரையும் கல்வி அறிவில் சிறந்தவராக இறைவன் ஆக்குவானாக.
இந்த வார சிந்தனை
“நிச்சயமாக அறிஞர்கள் இறைத்தூதர்களின் வாரிசுகள் ஆவர். இறைத்தூதர்கள் பொற்காசுகளையோ வெள்ளிக் காசு களையோ சொத்தாக விட்டுச் செல்லவில்லை. அவர்கள் கல்வியையே விட்டுச் சென்றனர். யார் அந்தக் கல்வியை எடுக்கிறாரோ அவர் நிறைவான நற்பேற்றை எடுத்துக் கொண்டார்.”- நபிமொழி
– சிராஜுல்ஹஸன்.

Tags : God ,
× RELATED வீர ஆஞ்சநேயரும் வீர மகானும்!