×

தோஷங்களில் எது கடுமையானது? செவ்வாய் தோஷமா, ராகு – கேது தோஷமா?

?தோஷங்களில் எது கடுமையானது? செவ்வாய் தோஷமா, ராகு – கேது தோஷமா?
– என்.இளங்கோவன், மயிலாடுதுறை.
சந்தேகமே இல்லாமல் ராகு – கேது தரும் தோஷம்தான் கடுமையானது. செவ்வாய் தோஷம் மற்றும் ராகு – கேது தோஷம் என்ற வார்த்தைகள் திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும்போது பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இதுவே அடிப்படையில் தவறான கருத்து ஆகும். முதலில் யோகம் என்றால் என்ன, தோஷம் என்றால் என்ன என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். யோகம் என்றால் அது ஏதோ பெரிய அதிர்ஷ்டம் போலவும், தோஷம் என்றால் அது ஏதோ மிகப்பெரிய குறையைத் தருவதாகவும் நாமாகப் புரிந்துகொள்கிறோம். செவ்வாய் மற்றும் ராகு – கேது தோஷம் என்பது மணவாழ்க்கையை பாதித்துவிடும் என்பது போல, பல தவறான கருத்துக்கள் நம்மிடையே பரப்பப்பட்டுள்ளது.
ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து, மற்றொருவருக்கு இல்லாவிடில் தம்பதியரில் எவரேனும் ஒரு உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பது முற்றிலும் மூடநம்பிக்கையே ஆகும். செவ்வாய் தோஷம் என்று குறிப்பிடப்படும் இந்த விதிக்கும், தம்பதியரின் ஆயுளுக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை. ஆயுளை நிர்ணயிக்கும் சக்தி கடவுளைத் தவிர வேறெவருக்கும் கிடையாது. தோஷம் என்ற வார்த்தைக்கு குறை என்று வேண்டுமானால் பொருள் கொள்ளலாம். செவ்வாய் என்ற கோள் அமர்ந்துள்ள பாவகத்தைப் பொறுத்து ஏதேனும் ஒரு வகையில் குறை உண்டாகக்கூடும் என்று வேண்டுமானால் கருத்தில் கொள்ளலாம். அதிலும் செவ்வாயின் பலத்தை கணக்கில் கொள்ள வேண்டும். லக்ன பாவகத்தில் செவ்வாய் அமரப்பெற்றவர்கள் மிகுந்த தைரியசாலிகளாகக் காணப்படுவார்கள். காவல்துறையில் வீரதீரச்செயல் புரிகின்றவர்களின் ஜாதகங்களில் செவ்வாயின் தாக்கம் அதிகரித்திருப்பதைக் காணமுடியும். அதே போலத்தான் ராகு – கேது தோஷம் என்பதும். ராகு – கேது என்றழைக்கப்படும் நிழற்கோள்கள், மனிதனின் ஜாதகத்தில் தங்கள் அமர்விடத்தின் அடிப்படையில் பாதிப்பினைத் தந்து விடுகின்றன. ஜோதிடவியல் ரீதியாக இந்த இரண்டு கிரஹங்களுக்கு என்று தனியாக எந்த ஒரு சக்தியும் கிடையாது. ஆனால், மற்ற கோள்களின் இணைவினைப் பெறும்போது அவற்றின் தன்மையை மாறுபடச் செய்யும் திறன் இவர்களுக்கு உண்டு.
புரியும்படியாக சொல்லவேண்டும் என்றால், இவை இரண்டும் வேதிப் பொருட்கள் போல. உப்பு அல்லது சர்க்கரை என்றுகூட நினைவில் வைத்துக் கொள்வோம். உப்பானது பாலில் கலந்தால் பால் திரிந்து விடுகிறது. சர்க்கரையானது சட்டினியில் சேர்ந்தால் அதன் ருசியை மாற்றிவிடுகிறது. அதுபோல இந்த இரண்டு கோள்களும் ஜாதகத்தில் எந்த பாவகத்தில் அமர்ந்திருக்கிறார்கள், எந்த கோளின் இணைவினைப் பெற்றிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து இவர்கள் தரும் பலனின் அளவு மாறுபடும்.
பொதுவாக இவை இரண்டும் நேரடியாக வந்து சேர வேண்டிய பலனை மாற்றிவிடுவதால், இந்த இரு நிழல் கிரஹங்களையும் தீய கோள்கள் என்றே சித்தரிக்கின்றோம். நிஜ வாழ்க்கையில் இந்த நிழல் கிரஹங்கள் நமக்கு வந்து சேர வேண்டிய பலனின் தன்மையை மாற்றிவிடுகின்றன.
அது ஒரு சிலருக்கு நன்மையாகவும், ஒரு சிலருக்கு தீமையாகவும் அமைந்துவிடுகிறது. பொதுவில் இவை இரண்டும் அசுப கிரஹங்களே ஆகும். உதாரணத்திற்கு சந்திரன் என்ற கிரஹத்தை எடுத்துக் கொள்வோம். ஜென்ம லக்னத்தில் சந்திரன் இருக்கப் பிறந்தவர்கள் சாத்வீகமான அழகினை உடையவர்களாகவும், அமைதியான குணத்தினை உடையவர்களாகவும், அன்பானவர்களாகவும் இருப்பார்கள். சந்திரன் மனோகாரகன் என்பதால், மனிதனின் மனதினை ஆளும் திறன் சந்திரனுக்கு உண்டு. இந்த சந்திரனோடு ராகுவோ அல்லது கேதுவோ இணையும்போது, அதாவது சந்திரனின் கதிர்வீச்சானது ராகு அல்லது கேது ஆகிய இந்த புகை மண்டலத்தினூடே புகுந்து வெளிவரும்போது நச்சுத்தன்மை கலந்ததாக மாறிவிடுகிறது.
நச்சுத்தன்மை கலந்த கதிர்வீச்சு மனிதனின் மீது விழும்போது அதன் உண்மையான பலன் மாறிவிடுகிறது. சந்திரனோடு ராகு இணையப்பெற்றால் அடிக்கடி உணர்ச்சிவசப்படுபவர்கள் ஆகவும், கேது இணையப்பெற்றால் மிகுதியான குழப்பத்தினை உடையவர்கள் ஆகவும் இருப்பார்கள். ஆக, ஒரு கிரஹம் தரும் நேரடியான பலனை இடையில் புகுந்து மாற்றும் திறன் படைத்தவை இந்த இரண்டு நிழற்கோள்கள் என்பதால் மற்ற ஏழு கிரஹங்களைவிட இவை இரண்டும் பாதிப்பு அளிக்கக்கூடியவையே என்று அறுதியிட்டுக் கூறலாம்.
ஆனால், இந்த பாதிப்பானது ஒரு சிலருக்கு நன்மையாகக்கூட முடியும். பாதிப்புகள்கூட ஒரு சிலரின் வாழ்வினில் நன்மையை ஏற்படுத்துவதை நாம் அன்றாட வாழ்வினில் காண்கிறோம். ஒரு வேலையும் செய்யாமல் சும்மா சுற்றிக்கொண்டிருந்த ஒருவன் வாகன விபத்தில் சிக்கி ஒரு காலை இழக்கிறான், இன்ஷ்யூரன்ஸ் நிறுவனம் நஷ்ட ஈடாக லட்சக்கணக்கில் பெரும்தொகையை அவனுக்கு அளிக்கிறது, கால் நன்றாக இருந்த நிலையில் வெறுமனே ஊர் சுற்றிக்கொண்டிருந்த ஒருவனுக்கு அவன் வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்க இயலாத தொகையை அந்த விபத்தானது அவனுக்கு வழங்கிவிடுகிறது. ஆக, இதுபோன்ற பலனை உண்டாக்குவதே இந்த நிழற்கோள்களின் பணி. இடையில் புகுந்து பலனை மாற்றிவிடுவதால் இவற்றை பயம் கலந்த பக்தியுடன்தான் அணுக வேண்டியிருக்கிறது.

?கர்ப்பிணிகளின் ஆடைகளை தேரை (தவளை இனம்) தீண்டலாகாது என்கிறார்களே ஏன்?
– பி.கனகராஜ், மதுரை.
கர்ப்பிணிகளின் ஆடைகள் மட்டுமல்ல, நம் யாருடைய ஆடைகளையும் தேரை தீண்டலாகாது. அவ்வாறு தேரை தீண்டிய ஆடையை மீண்டும் உபயோகப்படுத்தக் கூடாது. கர்ப்பிணிகள் அந்த ஆடையை அணிவதால் பிறக்கும் குழந்தைக்கு தோஷம் உண்டாகும் அல்லது குறைப்பிரசவம் நேரும் என்று சொல்லி வைத்திருப்பார்கள். சுத்தம் மற்றும் சுகாதாரம் என்பதுதான் அதன் பின்னணியில் இருக்கும் கருத்து என்ற அடிப்படை உண்மையைப் புரிந்து கொண்டாலே போதுமானது.

?வீட்டில் மகாலட்சுமி பூஜை செய்யும் முறையை விளக்கமாகக் கூறவும்.
– ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.
உங்கள் குடும்ப புரோஹிதர் அல்லது சாஸ்திரிகளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் இது. எவர் ஒருவரின் வீட்டில் பெண்களை தெய்வமாக மதிக்கிறார்களோ, அவர்கள் இல்லத்தில் நிச்சயமாக மகாலட்சுமியின் அருள் என்பது பரிபூரணமாய் இருக்கும். இதுபோக, அந்தக் குடும்பத்தலைவி அதிகாலையில் எழுந்து பல்துலக்கி முகம் அலம்பிய கையோடு விளக்கினை ஏற்றி வைத்துவிட்டு, வாசல் தெளித்து கோலம் போட வேண்டும். பின்னர் குளித்து முடித்து பூஜை அறையில், குத்துவிளக்கினை ஏற்றி வழிபட வேண்டும். காலை, மாலை இருவேளையுமே பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். வீட்டிற்கு வரும் பெண்களுக்கு வயது வித்தியாசம் பாராமல் தாம்பூலம் அளித்து உபசரிக்க வேண்டும். குடும்பப் பெண்கள் எப்போதும் வீட்டில் மங்களகரமான வார்த்தைகளை மட்டுமே பேச வேண்டும். இவையனைத்தும் எவருடைய இல்லத்தில் நடந்துகொண்டிருக்கிறதோ, அவர்கள் இல்லத்தில் லட்சுமி தேவி என்றென்றும் வாசம் செய்துகொண்டிருப்பாள்.

உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி அனுப்பிவைக்கவும். ஏன் எதற்கு எப்படி? தினகரன், ஆன்மிக மலர் தபால் பை எண். 2908, மயிலாப்பூர், சென்னை – 600 004.

 

Tags : Toshama ,Raku ,Ketu Toshama ,N. ILANGOWAN ,MAYILADUDHARA ,Mars Dhosham ,Ketu Dhosham ,
× RELATED வீர ஆஞ்சநேயரும் வீர மகானும்!