×

நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற வேண்டும்: பிரதமர் மோடி

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளதை ஒட்டி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; நாடாளுமன்ற கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெற வேண்டும். விண்வெளித் துறையில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. விக்ரம் – 1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது வரலாற்று சாதனை; இதன் மூலம் நாட்டு இளைஞர்கள் நம்மை பெருமையடையச் செய்துள்ளனர்.

சர்வதேச அரங்கில் இந்தியா மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது. உலக அரங்கில் நம் தேசத்தின் பெருமையை பதிய வைக்க வேண்டும். ராஜஸ்தான் மாநிலத்தில் பெரிய எரிபொருள் சுத்திகரிப்பு ஆலை தொடங்கப்பட்டுள்ளது. ஹைட்ரஜன் சக்தி மூலம் இயங்கும் ரயில் சேவை ஹரியானாவில் தொடங்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சாதனைகளை ஒரு சில நாடுகள் மட்டுமே செய்கின்றன; அதில் இந்தியாவும் ஒன்று. பல்வேறு பிரச்சினைகளை கடந்து இந்திய பொருளாதாரம் 7.5% வளர்ச்சியை கண்டுள்ளது. உலகில் அதிவேகமாக வளரும் பெரிய பொருளாதாரங்களில் இந்தியா தொடர்ந்து முதலிடம்.

அனுபவம் வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் அனுபவம் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும். வேகமான வளர்ச்சி மூலம் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும். நாடாளுமன்ற விவாதங்களுக்கு மதிப்பு சேர்த்து அனைத்து கருத்துகளையும் மதிக்க வேண்டும். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பயனுள்ளதாக இருக்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Tags : PM Modi ,Delhi ,Parliamentary Rainy Session ,Modi ,Parliament ,
× RELATED இந்தியாவில் முதல் டெங்கு தடுப்பூசி...