×

கள்ளக்குறிச்சி அருகே நள்ளிரவில் பயங்கரம் சொத்துக்காக கூலிப்படையுடன் சேர்ந்து தங்கையை வெட்டிக்கொன்ற அண்ணன்: தடுக்க முயன்ற கணவரின் கைகளும் துண்டிப்பு

சங்கராபுரம்: சொத்துக்காக சொந்த தங்கையை கூலிப்படையினருடன் சேர்ந்து அண்ணன் அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேரூராட்சி அலுவலக சாலை அருகே வசித்தவர் பாபு மனைவி தீபா(35). இவருக்கு யஷ்வந்த்குமார் மற்றும் யோகப்பிரவீன்குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் 10 மற்றும் 7ம் வகுப்பு படித்து வருகின்றனர். தீபாவின் தந்தை ராஜேந்திரன், விவசாயி. இவர் மனைவியுடன் வயது முதிர்வு காரணமாக மகள் வீட்டில் கடந்த இரண்டு ஆண்டாக தங்கியுள்ளனர்.

இந்த காலக்கட்டத்தில் பேரூராட்சி அலுவலகம் அருகே தனக்கு சொந்தமான 80 சென்ட் இடத்தை மகள் தீபா கேட்டு கொண்டதன்பேரில் அவரது மகன்கள் பெயரில் தானமாக எழுதிக் கொடுத்துள்ளார். இதனை அறிந்த அதே ஊரை சேர்ந்த தீபாவின் அண்ணன் காந்தகுமார் கோபம் அடைந்தார். அந்த இடத்தை தனக்கு எழுதிக் கொடுக்கும்படி கேட்டு தீபாவிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அதற்கு அவர் மறுத்ததால் தங்கையை கொலை செய்ய திட்டமிட்ட காந்தகுமார் 5 பேர் கொண்ட கூலிப்படையை ஏற்பாடு செய்துள்ளார். காந்தகுமாரின் தாயார் அம்பிகா கடந்தவாரம் இறந்து விட்டார். அதன் எட்டாம் துக்கம் அனுசரிப்பு நிகழ்ச்சி நடந்ததால் தீபாவின் குழந்தைகள் அங்கு சென்று விட்டனர். தீபாவும், பாபுவும் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்தி காந்தகுமார் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் தீபா வீட்டிற்கு சென்று சொத்தை எழுதிக் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

கைகலப்பாக மாறிய நிலையில் காந்தகுமார் மிளகாய் பொடியை தீபாவின் முகத்தில் தூவியுள்ளார். பின்னர் அவரும் 5 பேர் கொண்ட கூலிப்படையினரும் தீபாவை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதை பாபு தடுக்க முயன்றுள்ளார். ஆனால் அவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு அனைவரும் தப்பினர். தலை மற்றும் உடல் பகுதியில் பல்வேறு இடங்களில் வெட்டு காயத்துடன் தீபா ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கைகள் துண்டாக வெட்டப்பட்டு தலையில் படுகாயங்களுடன் மயங்கி கிடந்த தீபாவின் கணவர் பாபுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து சொத்துக்காக தங்கையை கொலை செய்த காந்தகுமார், கூலிப்படை கும்பலை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். சம்பவ இடத்தை எஸ்பி ஷஹனாஸ் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். சொத்துக்காக உடன்பிறந்த தங்கையை கூலிப்படை கும்பலுடன் சேர்ந்து அண்ணன் கொடூரமாக கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Kallakurichi ,Shankarapuram ,Babu ,Deepa ,Sankarapuram Panchayat Office Road ,Kallakurichi district ,Yashwanth Kumar ,Yoga Praveen Kumar… ,
× RELATED டெல்லியில் சிஜேபி அமைப்பின்...